Monday, 27 May 2024

தொல்காப்பியச் செய்யுள் உறுப்புகள் (பா - 1)

பாவின் வகைகள் (4)
1. ஆசிரியப்பா
2. வஞ்சிப்பா
3. வெண்பா
4. கலிப்பா

இவை அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வரும். 

இந்நால் வகை பாக்களும் ஆசிரியப்பா, வெண்பா என்ற இரு வகையில் அடங்கும்.

ஆசிரியப்பா போன்றது வஞ்சிப்பா
வெண்பா போன்றது கலிப்பா

இதனைத் தொல்காப்பியர்
ஆசிரிய நடைத்தே வஞ்சி ஏனை
வெண்பா நடைத்தே கலியென மொழிப
என்கின்றார்.

தேவரை வாழ்த்துதல், முனிவரை வாழ்த்துதல், ஏனையோரை வாழ்த்துதல் ஆகிய வாழ்த்துகள் நால் வகை பாவிலும் பயின்று வரும்.

புறநிலை வாழ்த்து - வெண்பா, ஆசிரியப்பா

வாயுறை வாழ்த்து, அவையடக்கம், செவியறிவுறூஉ - வெண்பா, ஆசிரியப்பா

Sunday, 26 May 2024

தொல்காப்பியச் செய்யுள் உறுப்புகள் (நோக்கு)

பாடலை இயற்றிய பின்பு மாத்திரை, எழுத்து, அசை, சீர், அடி எல்லாம் சரியாக உள்ளனவா? என்று மீள்பார்வை செய்வது நோக்கு ஆகும். 

நோக்கு பற்றிய தொல்காப்பிய நூற்பா வருமாறு:
மாத்திரை முதலா அடிநிலை காறும் நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே 

இளம்பூரணர் நோக்கு மூன்று வகைப்படும் என்கின்றார்.

1. ஒரு நோக்காக ஓடுதல் 
2. பல நோக்காக ஓடுதல் 
3. இடையிட்டு நோக்குதல் 

தொல்காப்பியச் செய்யுள் உறுப்புகள் (தொடை)

பூக்களை நாரினால் தொடுப்பது போலச் சொற்களால் பொருள் நயப்படவும் ஓசை நயப்படவும் தொடுப்பது தொடை ஆகும். 

சீரோடு சீரினைத் தொடுப்பதும் அடியோடு அடியினைத் தொடுப்பதும் தொடை ஆகும்.

தொல்காப்பியர் பத்து தொடைகளைக் குறிப்பிட்டுள்ளார்.
1. மோனை
2. எதுகை
3. முரண்
4. இயைபு
5. அளபெடை
6. பொழிப்பு
7. ஒரூஉ
8. செந்தொடை
9. நிரனிறுத்தல்
10. இரட்டை யாப்பு

மோனை
அடிதொறும் தலை எழுத்து ஒப்பது மோனை
அடிதொறும் முதற்கண்  ஓரெழுத்தே வரத் தொடுப்பது ஆகும்

எதுகை
அஃது ஒழித்து ஒன்றின் எதுகை ஆகும்
அடிதொறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது ஆகும்.

முரண்
மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே

முரண் இரு வகைப்படும். 
1. சொல் முரண்
2. பொருள் முரண்

இயைபு
இறுவாய் ஒப்பின் அஃது இயைபென மொழிப
அடிதொறும் ஈற்றெழுத்து ஒன்றி வருவது.

அளபெடை
அளபெழின் அவையே அளபெடைத் தொடையே
அடிதொறும் அளபு எழத் தொடுப்பது.

பொழிப்பு (1*3)
ஒரு சீரிடையிட்டு எதுகை ஆயின் 
பொழிப்பு என மொழிதல் புலவர் ஆறே

ஒரூஉ (1*4)
இருசீர் இடையிடின் ஒரூஉ என மொழிப

செந்தொடை
சொல்லிய தொடையொடு வேறுபட்டு இயலின்
சொல்லியற் புலவர் அது செந்தொடை என்ப

நிரல்நிறை
பொருளைச் சேர நிறுத்திப் பயனையும் சேர நிறுத்தல்.

இரட்டை யாப்பு
ஓரடி முழுதும் ஒரு சொல்லே வருதல்.

தொல்காப்பியச் செய்யுள் உறுப்புகள் (தூக்கு)

தூக்கு என்பது ஓசை ஆகும். தூக்கு பற்றிப் பேராசிரியர், "பாக்களைத் துணிந்து நிறுத்துதல்" என்று விளக்கம் தருகின்றார்.

இளம்பூரணர் தூக்கு பற்றிக் கூறும் விளக்கம் வருமாறு:
தூக்காவது பாக்களைத் துணிந்து நிறுத்துதலாகிய ஓசை விகற்பம் ஆதலின் தூக்கு எனினும் ஓசை எனினும் ஒக்கும்.

பாக்களின் ஓசை
வெண்பா - செப்பலோசை
ஆசிரியப்பா -அகவலோசை
கலிப்பா - துள்ளலோசை
வஞ்சிப்பா - தூங்கலோசை

தொல்காப்பிய நூற்பாக்கள் பின்வருமாறு:
அகவல் என்பது ஆசிரி யம்மே

அஃது அன்று என்ப வெண்பா யாப்பே

துள்ளல் ஓசை கலியென மொழிப

தூங்கல் ஓசை வஞ்சி யாகும்


தொல்காப்பியச் செய்யுள் உறுப்புகள் (மரபு)

மரபு என்பது நம் முன்னோர் ஒரு பொருளை எச்சொல்லினால் குறித்தனரோ அச்சொல்லினால் வழங்குவது ஆகும். 

பேராசிரியர் மரபு பற்றிக் கூறும் கருத்து ஈண்டு நினைத்தற்குரியது. 
சொல்லும் பொருளும் அவ்வக் காலத்தார் வழங்கும் ஆற்றானே செய்யுள் செய்வது மரபு 

தொல்காப்பியர் மரபினை விளக்குவது கவிதையியலோடு தொடர்புடையது.
மரபே தானும்
நாற்சொல் இயலான் யாப்புவழிப் பட்டன்று

தொல்காப்பியச் செய்யுள் உறுப்புகள் (யாப்பு)

எழுத்து, அசை, சீர், அடி முதலாகச் சொல்லப்பட்ட அடியினால் தான் குறித்த பொருளை முற்றுப் பெற நிறுத்துவது யாப்பு ஆகும்.

தொல்காப்பியர் யாப்புப் பற்றிக் கூறும் நூற்பா வருமாறு

எழுத்து முதலா ஈண்டிய அடியிற்
குறித்த பொருளை முடிய நாட்டல்
யாப்பென மொழிப யாப்பறி புலவர்

யாப்பின் வகைகள்
தொல்காப்பியர் யாப்பின் வகைகளாக ஏழினைக் கூறியுள்ளார். அவை
1. பாட்டு 2. உரை 3. நூல் 4. வாய்மொழி 5. பிசி 6. அங்கதம் 7. முதுசொல் என்பன.



தொல்காப்பியரின் செய்யுள் உறுப்புகள் (அடி)

தொல்காப்பியர் நாற்சீர் பற்றியே அடியை வகுக்கிறார். இதனை, 
நாற்சீர் கொண்டது அடியெனப் படுமே 
என்ற நூற்பா தெளிவுபடுத்தும்.

அடியின் சிறப்பால் பாட்டு அமையும் என்பது தொல்காப்பியர் கருத்து.

அடி பாகுபாடு (5)
1. குறளடி - 4 எழுத்துகள் முதல் 6 எழுத்துகள் வரல்
2. சிந்தடி - 7 எழுத்துகள் முதல் 9 எழுத்துகள் வரல்
3. அளவடி (நேரடி) - 10 எழுத்துகள் முதல் 14 எழுத்துகள் வரல்
4. நெடிலடி - 15 எழுத்துகள் முதல் 17 எழுத்துகள் வரல்
5. கழிநெடிலடி - 18 எழுத்துகள் முதல் 20 எழுத்துகள் வரல்

ஐவ்வகை அடிகளும் ஆசிரியப்பாவில் வரும்.

முடுகியலடி - எழுசீரால் வருவது

தொல்காப்பியரின் செய்யுள் உறுப்புகள் (சீர்)

அசைகள் ஒன்றோ பலவோ தொடர்ந்து அமைக்கப் பெறுவது சீர் ஆகும். 

இரண்டு அசைகளால் ஓசை நிறைந்தும் மூன்றசைகளால் ஓசை நிறைந்தும் முடிவது சீர் எனப்படும்.

தொல்காப்பியர் சீர் பற்றிக் கூறுகையில், 
ஈரசை கொண்டு மூவசை புணர்த்தும்
சீர் இயைந்து இற்றது சீர் எனப்படுமே
என்கின்றார். 

இயற்சீர் - இயலசை மயங்குதல்
ஆசிரிய உரிச்சீர் - உரியசை மயங்குதல்

உரியசை முன்னர் நிரையசை சேர்ந்து வரினும் உரியசை மயக்கம் எனக் கொண்டு ஆசிரிய உரிச்சீராம் (நேர்பு + நிரை & நிரைபு + நிரை)

நேர்பு, நிரைபு முன்னர் நேரசை வரின் அவ்விரண்டும் இயற்சீராகும். (நேர்பு + நேர் & நிரைபு + நேர்)

வெண்பா உரிச்சீர் - இயற்சீர் இறுதி முன்னர் நேர் வரல் 

வஞ்சி உரிச்சீர் - வெண்பா உரிச்சீர் அல்லாத நிரை இறுதி வந்த கனிச்சீர்.


Saturday, 25 May 2024

தொல்காப்பியரின் செய்யுள் உறுப்புகள் (அசை)

அசை என்பது எழுத்து அசைத்து இசை கோடல் ஆகும். 

அசை இரு வகைப்படும்.
1. இயலசை 
2. உரியசை

இயலசை (2)
1. நேரசை - குறில் தனித்து வரல்
நெடில் தனித்து வரல்
குறிலோடு ஒற்று வரல்
நெடிலோடு ஒற்று வரல்

2. நிரையசை - குறிலிணை வரல்
குறிலிணை ஒற்று வரல் 
குறில் நெடில் வரல்
குறில் நெடில் ஒற்று வரல்

உரியசை (2)
1. நேர்பசை 
2. நிரைபசை

தொல்காப்பியர் அசை குறித்துக் கூறும் நூற்பாக்கள் வருமாறு

குறிலே நெடிலே குறிலிணை குறில் நெடில் 
ஒற்றொடு வருதலொடு மெய்ப்பட நாடி 
நேரும் நிரையும் என்றிசின் பெயரே

இருவகை உகரமோடு இயைந்தவை வரினே
நேர்பு நிரைபும் ஆகும் என்ப 
குறிலிணை உகரம் அல்வழி யான 

இயலசை முதல் இரண்டு ஏனைய உரியசை

தொல்காப்பியச் செய்யுள் உறுப்புகள் (எழுத்தியல்)

எழுத்து என்பது எழுதப்படுவது ஆகும். இது அசை, சீர், அடி, தொடை, வண்ணம் ஆகியவற்றுக்கு உறுப்பாக வரும்.

எழுத்தியல் 3 வகைப்படும். அவை 1. உயிரெழுத்து 2. மெய்யெழுத்து 3. சார்பெழுத்து என்பன.

உயிரெழுத்து - குறில் - அ இ உ எ ஒ
                              நெடில் - ஆ ஈ ஊ ஏ ஐ ஓ 
                                               ஔ

மெய்யெழுத்து - வல்லினம் - க ச ட த ப ற
                        மெல்லினம் - ங ஞ ண ந ம ன
                         இடையினம் - ய ர ல வ ழ ள 

சார்பெழுத்து - குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம்

மாத்திரை வகையும் எழுத்தியல் வகையும்
மேற்கிளந் தனவே என்மனார் புலவர்

தொல்காப்பியச் செய்யுள் உறுப்புகள் (மாத்திரை)

மாத்திரை என்பது எழுத்துக்கள் ஒலிக்கும் கால அளவைக் குறிக்கும். இது கண் இமைக்கும் நேரமும் கை நொடிக்கும் நேரமும் எனக் கணக்கிடப்படுகின்றது. 

தொல்காப்பியர் மாத்திரை பற்றி எழுத்ததிகாரத்தில் கூறியுள்ளார். 

நெட்டெழுத்து - 2 மாத்திரை
குற்றெழுத்து - 1 மாத்திரை
உயிரளபெடை - 3 மாத்திரை
குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் மெய் - 1/2 மாத்திரை
ஒற்றளபெடை - 1 மாத்திரை
ஐகாரக் குறுக்கம் - 1 மாத்திரை
மகரக்குறுக்கம் - 1/4 மாத்திரை
உயிர்மெய் - ஏறிய உயிரின் அளவு

மாத்திரை வகையும் எழுத்தியல் வகையும்
மேற்கிளந் தனவே என்மனார் புலவர்


தொல்காப்பியச் செய்யுள் உறுப்புகள் (மாட்டு)

தொல்காப்பியர் குறிப்பிடும் 34 செய்யுள் உறுப்புகளுள் 25 ஆவது செய்யுள் உறுப்பு மாட்டு ஆகும். பொருள் புலப்பாட்டை அறிந்து கொள்ள உதவுவது மாட்டு. ஒன்றை இன்னொன்றோடு சேர்த்தலை மாட்டு என்பர். தொல்காப்பியர் மாட்டு பற்றிக் கூறும் நூற்பா வருமாறு.

அகன்று பொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும்
இயன்று பொருள் முடியத் தந்தனர் உணர்த்தல்
மாட்டு என மொழிப பாட்டியல் வழக்கின்

தொல்காப்பியர் கூறும் மாட்டு உறுப்பை நச்சினார்க்கினியர் தமது  உரையில் பயன்படுத்தி உள்ளார்.  

தொல்காப்பியரின் அகப்பாட்டு உறுப்புகள் (துறை)

கவிதையாக்கத்திற்கு இன்றியமையாத உறுப்பாக அமைவது துறை ஆகும். தொல்காப்பியத்தில் 24 ஆவது உறுப்பாகப் பேசப்பட்டுள்ளது. இது கவிதையின் கருப்பொருளைக் கவிஞன் எவ்வாறு அமைத்துள்ளான்? என்று பேசுகின்றது. 

அவ்வவ் மாக்களும் விலங்கு மன்றிப்
பிற அவண் வரினும் திறவதின் நாடித்
தத்தம் இயலான் மரபொடு முடியின்
அத்திறத் தானே துறையெனப் படுமே

என்பது துறை பற்றிய தொல்காப்பிய நூற்பா. 

Friday, 24 May 2024

தொல்காப்பியரின் அகப்பாட்டு உறுப்புகள் (பொருள் வகை)

கவிதையில் பொதிந்து கிடக்கும் பாடுபொருளைக் கூறுவதாக அமைந்தது பொருள் வகை என்னும் செய்யுள் உறுப்பு. இதில் இன்பம், துன்பம், புணர்வு, பிரிவு, ஒழுக்கம் ஆகியவை கூறப்படும். இளம்பூரணர், "இத்திணைக்குரிய பொருள் இப்பொருள் என்னாது எல்லாப் பொருட்கும் பொதுவாகி நிற்கும் பொருளே பொருள் வகையாம்" என்று விளக்கம் எழுதியுள்ளார். 

இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும் 
ஒழுக்கமும் என்று இவை இழுக்கு நெறி இன்றி 
இதுவாகு இத்திணைக்கு உரிப்பொருள் என்னாது 
பொதுவாய் நிற்றல் பொருள்வகை என்ப 

தொல்காப்பியரின் அகப்பாட்டு உறுப்புகள் (எச்சம்)

தொல்காப்பியர் செய்யுளியலில் இரு வகை எச்சங்களைப் பற்றிக் கூறியுள்ளார். இவ் எச்சங்கள் கவிதைப் பொருள் கொள்ளும் முறை பற்றியவை. புலவன் ஒருவன் தம் கவிதையில் எல்லாவற்றையும் அப்படியே புலப்படும்படி சொல்லிவிடமாட்டான். தம் கவிதையைப் படிப்பவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிலவற்றை விட்டு விடுவது உண்டு. அவற்றையே எச்சம் என்ற சொல்லால் கூறுகிறார் தொல்காப்பியர்.

சொல்லப்படாத மொழிகளைக் குறித்துக் கொள்ளச் செய்தல் எச்சம் ஆகும். இஃது கூற்றினும் குறிப்பினும் வரும்.

சொல்லெச்சம் - ஒரு சொல்லைப் பெய்து பொருள் கொள்வது.

குறிப்பெச்சம் - ஒரு பொருள் எஞ்ச நிற்பது.

சொல்லொடும் குறிப்பொடும் முடிவுகொள் இயற்கை
புல்லிய கிளவி எச்சம் ஆகும்
என்று தொல்காப்பியர் எச்சம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

தொல்காப்பியரின் அகப்பாட்டு உறுப்புகள் (மெய்ப்பாடு)

அகம், புறம் இரண்டிற்கும் பொதுவாக வழங்கும் உறுப்பு மெய்ப்பாடு ஆகும். தொல்காப்பியர் மெய்ப்பாட்டிற்கு என்று தனி இயலை வகுத்துள்ளார். செய்யுளியலில் மெய்ப்பாட்டின் இலக்கணம் பற்றித் தொல்காப்பியர் குறிப்பிடுகையில், 
உய்த்து உணர்வு இன்றித் தலைவரும் பொருளான் 
மெய்ப்பட முடிப்பது மெய்ப்பாடு ஆகும் என்கின்றார்.

மனதில் தோன்றிய குறிப்பு உடலில் வெளிப்படுவது மெய்ப்பாடு ஆகும்.

உணர்ச்சியின் மூலமாகப் பொருளைப் புலப்படுத்தும் உறுப்பு மெய்ப்பாடு ஆகும்.
 

தொல்காப்பியரின் அகப்பாட்டு உறுப்புகள் (பயன்)

சொல்லிய பொருளால் பிறிதொன்று பயக்கச் செய்வது பயன் ஆகும் என்று பேராசிரியர் விளக்கம் தருகின்றார். தொல்காப்பியர் பயன் பற்றிக் கூறுகையில், 

இதுநனி பயக்கும் இதன்மாறு என்னும்
தொகுநிலைக் கிளவி பயன் எனப்படுமே
என்கின்றார். 

இந்நூற்பாவிற்கு உரை எழுதிய இளம்பூரணர், "யாதானும் ஒரு பொருளை கூறிய வழி இதன் பின்பும் இதனைப் பயக்கும் என விரித்துக் கூறாது முற்கூறிய சொல்லினானே தொகுத்துக் கூறுதல் பயன் எனப்படும் என்றவாறு" என்கின்றார்.

தொல்காப்பியரின் அகப்பாட்டு உறுப்புகள் (காலம்)

கருத்தாடல் உத்தியாகக் கருதப்பெறுவது காலம் ஆகும். நிகழ்ச்சியைக் கூறும்போது இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகியவற்றில் கூற வேண்டும் என்ற கருத்தில் உருவான செய்யுள் உறுப்பு காலம் ஆகும். தொல்காப்பியர் காலம் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார். 
இறப்பே நிகழ்வே எதிரது என்னும்
திறத்தியல் மருங்கில் தெரிந்தனர் உணரப்
பொருள் நிகழ்வு உரைப்பது காலம் ஆகும்

தொல்காப்பியரின் அகப்பாட்டு உறுப்புகள் (களன்)

தொல்காப்பியர் களன் என்பதைச் செய்யுள் உறுப்புகளுள் ஒன்றாகக் கூறியுள்ளார். இவ் உறுப்பு அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாக வரக்கூடியது ஆகும். தொல்காப்பியர் களன் என்பதன் இலக்கணத்தைப் பற்றிக் கூறும் நூற்பா வருமாறு
ஒரு நெறிப் பட்டாங்கு ஓரியல் முடியும் 
கரும நிகழ்ச்சி இடம் என மொழிப 
தொல்காப்பியர் களன் என்பதையும் இடம் என்பதையும் ஒரே பொருளில் கையாண்டு உள்ளார். 
பேராசிரியர் களன் என்பதற்குப் பின்வருமாறு விளக்கம் தருகின்றார்.
களன் என்பது முல்லை குறிஞ்சி முதலாயினவும் உணரச் செய்தல் மற்றும் தன்மை முன்னிலை படர்க்கையுமாம் 

தொல்காப்பியர் அகத்திணையியல், களவியல், கற்பியல் ஆகிய இயல்களில்  அகமாந்தர்களுக்குரிய கூற்றுக்களைக் குறிப்பிடும்போது களன் என்பதைப் பயன்படுத்தி உள்ளார்.

Thursday, 23 May 2024

தொல்காப்பியரின் அகப்பாட்டு உறுப்புகள் (கேட்போர்)

தொல்காப்பியர் குறிப்பிடும் கூற்று,  கேட்போர் என்ற இரண்டு உறுப்புகளும் நாடக வழக்கு சார்ந்து அமைபவை ஆகும். கருத்துப் புலப்பாட்டில் கூற்று, கேட்போர் இருவரும் இன்றியமையாதவர்களாக அமைவர். கூற்று என்பது கவிஞர் நோக்கியதாகவும் கேட்போர் என்பது வாசகர் நோக்கியதாகவும் அமைகின்றது. தொல்காப்பியர் கிழவன் கிழவியின் கூற்றைக் கேட்பவர்களாகப் பதின்மரைக் குறிப்பிடுகின்றார். மேலும் கூற்றைக் கேட்பதற்கான சூழலையும் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். இக்கருத்துக்களை அரண் செய்யும் விதத்தில் பின்வரும் நூற்பாக்கள் அமைந்துள்ளன. 

மனையோள் கிளவியும் கிழவன் கிளவியும் 
நினையும் காலை கேட்குநர் அவரே 

பார்ப்பார் அறிவர் என்று இவர் கிளவி 
யார்க்கும் வரையார் யாப்போடு புணர்ந்தே 

பரத்தை வாயில் என இரு கூற்றும் 
கிழத்தியைச் சுட்டாக் கிளப்புப் பயனிலவே

தொல்காப்பியர் மக்கள் இல்லாத அஃறிணைப் பொருட்கள் சொல்வதாகவும் கேட்பதாகவும் கூறுகின்றார்.  

ஞாயிறு திங்கள் அறிவே நாணே
 கடலே கானல் விலங்கே மரனே
புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே 
அவையல பிறவும் நுதலிய நெறியாற்
சொல்லுந போலவும் கேட்குந போலவும் 
சொல்லி யாங்கு அமையும் என்மனார் புலவர்  
இந்நூற்பா பிற்காலத்தில் தூது இலக்கியம் தோன்றுவதற்கு அடிப்படையாக அமைந்தது எனலாம். 

தொல்காப்பியரின் அகப்பாட்டு உறுப்புகள் (கூற்று)

தொல்காப்பியம் 34 செய்யுள் உறுப்புகளைப் பற்றிப் பேசுகிறது. இவற்றுள் ஒன்று கூற்று. இதில் கூற்றை நிகழ்த்துபவர், கூற்றைக் கேட்பவர் இடம் பெறுவர். தொல்காப்பியர் செய்யுளியலில் களவில் கூற்று நிகழ்த்துபவர் பற்றியும் கற்பில் கூற்று நிகழ்த்துபவர் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். 

களவில் கூற்று நிகழ்த்துபவர்கள்
பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி கிழவன் கிழத்தி ஆகிய அறுவரும் களவில் கூற்று நிகழ்த்துபவர்கள் ஆவர். இதனைத் தொல்காப்பியம் பின்வருமாறு கூறுகின்றது.

பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி
சீர்த்தகு சிறப்பின் கிழவன் கிழத்தியோடு 
அளவியல் மரபின் அறுவகை யோரும்
களவில் கிளவிக்குரியர் என்ப  

கற்பில் கூற்று நிகழ்த்துபவர்கள்
கற்பில் கூற்று நிகழ்த்துபவர்களாகப் பாணன், கூத்தன், விறலி, பரத்தை அறிவர், கண்டோர், பார்ப்பான், பாங்கன், தோழி, செவிலி, கிழவன், கிழத்தி உள்ளிட்டோரைத் தொல்காப்பியம் பகர்கின்றது. 

பாணன் கூத்தன் விறலி பரத்தை 
யாணஞ் சான்ற அறிவர் கண்டோர் பேணுதகு சிறப்பின் பார்ப்பான் முதலா 
முன்னுறக் கிளந்த அறுவரோடு தொகைஇ
தொல்நெறி மரபின் கற்பிற்கு உரியர் 



தொல்காப்பியரின் அகப்பாட்டு உறுப்புகள் (கைகோள்)

தொல்காப்பியர் திணை என்ற உறுப்பிற்கு அடுத்து கைகோள் என்ற உறுப்பைக் குறிப்பிடுகின்றார். கைகோள் என்பதை ஒழுக்கம் என்றே பொருள் கொள்ளலாம். தொல்காப்பியர் கூறும் கைகோள் 2 வகைப்படும். அவை 1. களவு 2. கற்பு. 
களவொழுக்க நிகழ்வுகள் (4)
1. காமப் புணர்ச்சி 2. இடந்தலைப்படல் 3. பாங்கொடு தழால் 4. தோழியிற் புணர்வு
கற்பொழுக்க நிகழ்வுகள் (4)
அ. மறை வெளிப்படல் ஆ. தமரிற் பெறுதல் இவற்றை அடிப்படையாகக் கொண்டு 1. மலிவு 2.புலவி 3. ஊடல் உணர்தல் 4. பிரிவு ஆகிய கற்பொழுக்க நிகழ்வுகள் அமையும்.

இதனையே தொல்காப்பியர் பின்வரும் நூற்பாக்கள் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.

காமப் புணர்ச்சியும் இடந்தலைப் படலும் 
பாங்கொடு தழாஅலும் தோழியிற் புணர்வும்
ஆங்க நால் வகையினும் அடைந்த சார்வொடு
மறையென மொழிகள் மறையோர் ஆறே

மறை வெளிப்படுதலும் தமரிற் பெறுதலும் 
இவை முதலாகிய இயல் நெறி திரியாது 
மலிவும் புலவியும் ஊடலும் உணர்வும்
பிரிவொடு புணர்ந்தது கற்பெனப் படுமே 

Wednesday, 22 May 2024

தொல்காப்பியரின் அகப்பாட்டு உறுப்புகள் (திணை)

திணை என்ற சொல்லிற்கு ஒழுக்கம் என்பது பொருள். இவ்வொழுக்கம் அக ஒழுக்கம் புற ஒழுக்கம் என இரு வகைப்படும். அக ஒழுக்கம் என்பது தலைவனும் தலைவியும் கூடிய வழி பெறும் பேரின்பம் பற்றியது ஆகும். இதில் தலைவன், தலைவியின் இயற்பெயர் சுட்டிக் கூறப் பெறா. புற ஒழுக்கம் என்பது அகம் அல்லாத ஒழுகலாறு. அதாவது, இஃது இவ்வாறு இருந்தது எனச் சுட்டப்படுவது. கொடை, வீரம் போன்றவை இதில் அடங்கும். தொல்காப்பியர் அகப்பாட்டு உறுப்புகளுள் திணையை முதன்மையாகக் குறிப்பிடுகின்றார். இதனை,
கைக்கிளை முதலா எழு பெருந்திணையும் / முற் கிளந்தனவே 
 முறைநெறி வகையின  என்ற நூற்பா தெளிவுபடுத்தும்.
 
திணை கைக்கிளை, குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல், பெருந்திணை என ஏழு வகைப்படும். 

தொல்காப்பியரின் அகப்பாட்டு உறுப்புகள் (முன்னம்)

தொல்காப்பியர் குறிப்பிடும் 34 செய்யுள் உறுப்புகளுள் ஒன்று முன்னம் ஆகும். இது அகப்பொருளிலும் புறப்பொருளிலும் வரும் என்று பேராசிரியர் விளக்கம் எழுதியுள்ளார். தொல்காப்பியர் உள்ளுறை, இறைச்சி பற்றிக் கூறும் கருத்துகள் குறிப்புப் பொருளைச் சுட்டுவனவாக அமைந்துள்ளன. இவை போலவே முன்னமும் குறிப்புப் பொருளைத் தருகின்றது. முன்னம் பற்றித் தொல்காப்பியர் கூறும்போது, இவ்விடத்து இம்மொழி இவரிவர்க்கு உரித்தென / அவ்விடத்து அவரவர்க்கு உரைப்பது முன்னம் ஆகும் என்கின்றார்.