Tuesday, 24 December 2024

தொல்காப்பியத்தில் அங்கதம்

 அங்கதம்

தொல்காப்பியர் செய்யுளை இரு வகைகளைப் பிரிக்கின்றார். அவற்றுள் ஒன்று அங்கதச் செய்யுள். இது வசையொடும் நசையொடும் புணர்ந்து வரும். அதனால்தான் தொல்காப்பியர்,

வசையொடும் நசையொடும் புணர்ந்தன்று ஆயின்

அங்கதச் செய்யுள் என்மனார் புலவர் (தொல்.பொருள்.செய்.125)

என்கின்றார்.

 அங்கதம் வகைகள்

அங்கதம் இரு வகைப்படும். அவை 

1. செம்பொருள் அங்கதம்

2. பழிகரப்பு அங்கதம்

என்பனவாகும்.

தொல்காப்பியம்,

அங்கதம் தானே அரில்தபத் தெரியின்

செம்பொருள் கரந்தது என இரு வகைத்தே (தொல்.பொருள்.செய்.120)

செம்பொருள் ஆயின் வசையெனப் படுமே (தொல்.பொருள்.செய்.121)

மொழி கரந்து மொழியின் அது பழிகரப்பு ஆகும் (தொல்.பொருள்.செய்.122)

ஆகிய நூற்பாக்களில் அங்கதம் பற்றிப் பேசியுள்ளது.

புகழ்வது போன்று வசை

நூற்றுவர் தலைவனைக் குறங்கு அறுத்திடுவான் (கலித்.52)

வசை போன்று புகழ்வது

கொடை மடம் படுதல் அல்லது (புறம்.142)




Thursday, 22 August 2024

அச்சம் மெய்ப்பாடு

தொல்காப்பியர் அச்சம் தோன்றும் நிலைக்களன்கள் பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார். 

அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே

இந்நூற்பாவில் அணங்கு, விலங்கு, கள்வர், இறை ஆகிய நான்கு நிலைக்களன்களில் அச்சம் தோன்றும்.

மருட்கை மெய்ப்பாடு

மருட்கை - வியப்பு (இளம்பூரணர்)

மருட்கை மெய்ப்பாடு புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம் ஆகிய நான்கு நிலைக்களன்களைப் பெற்று வரும்.

புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு
மதிமை சாலா மருட்கை நான்கே

இளிவரல் மெய்ப்பாடு

எண்வகை மெய்ப்பாடுகளுள் ஒன்று இளிவரல். இது இகழ்ச்சி உணர்வின் வெளிப்பாடு ஆகும். மூப்பு, பிணி, வருத்தம், மென்மை ஆகிய நான்கு நிலைக்களன்களைப் பெற்று வரும். 

மூப்பே பிணியே வருத்தம் மென்மையோடு
யாப்புற வந்த விளிவரல் நான்கே 


எனத் தொல்காப்பியம் இளிவரல் மெய்ப்பாட்டின் நிலைக்களன்களைக் கூறுகின்றது.

Tuesday, 13 August 2024

அழுகை மெய்ப்பாடு

அழுகை மெய்ப்பாடு இழிவு, இழவு, அசைவு, வறுமை என்ற நான்கு நிலைக்களன்களை அடியொற்றித் தோன்றும்.  தொல்காப்பியம் 
இழிவே இழவே அசைவே வறுமைஎன
விளிவில் கொள்கை அழுகை நான்கே (தொல்.பொருள்.மெய்.5)
என்கின்றது.

நகை மெய்ப்பாடு

எள்ளல், இளமை, பேதைமை, மடன் ஆகிய நான்கும் நகை மெய்ப்பாட்டிற்குரிய நிலைக்களன்கள் ஆகும். இதனைத் தொல்காப்பியர் 
எள்ளல் இளமை பேதைமை மடன் என்று
உள்ளிட்ட நகை நான்கு என்ப (தொல்.பொருள்.மெய்.4) 
எனக் கூறியுள்ளார். 

மெய்ப்பாடு வகைகள்

எண்வகை மெய்ப்பாடுகள்
நகை, அழுகை, இளிவரல்,  மருட்கை, பெருமிதம், அச்சம், வெகுளி, உவகை என்பன.