Monday, 18 September 2023

குணவீர பண்டிதரின் உருபனியல் சிந்தனைகள்

 குணவீர பண்டிதரின் உருபனியல் சிந்தனைகள்

முனைவர் மு. சங்கர்

உதவிப்பேராசிரியர்

தமிழியல் துறை

ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி (தன்னாட்சி)

சிவகாசி - 626 130

விருதுநகர் மாவட்டம்

அலைபேசி எண் - 6384632150

மின்னஞ்சல் - sankartamilskcgri@gmail.com

 

ஆய்வுச்சுருக்கம்

                மேலை நாடுகளிலும் இந்தியாவிலும் வளர்ந்து வரும் துறை மொழியியல் ஆகும். இது மொழித் துறையினருக்கு மட்டும் உரியதன்று. தருக்கவியல், உளவியல், சமூகவியல், மானிடவியல் முதலிய பல துறைகளுக்கும் உரிய துறை. இவ்வாறாக இக்காலத்தில் மொழியியல் துறை வியத்தகு வளர்ச்சியை அடைந்து வருகின்றது. மொழியின் அமைப்பை மொழியியலார் விளக்கும்போது ஒலியியல், ஒலியனியல், உருபனியல், தொடரியல் என்ற நிலைகளில் விளக்குவர். இத்தகைய விளக்குமுறையே அமைப்பு மொழியியல் ஆகும். இதில் உருபனியல் பிரிவு மொழியின் சொல்லமைப்பை ஆராய்கின்றது. அஃதாவது, ஒலியன்கள் சிலவோ, பலவோ இணைந்து உருபன் ஆகின்றன. பொருள் தரும் மிகச் சிறிய ஒலியக்கூறு உருபனாகும். இது பற்றி ஆராய்வது உருபனியல் ஆகும். உருபனியல் ஒலியனியலை மாதிரியாக வைத்தே வளர்ச்சி அடைந்தது. இன்று மனிதர்களிடையே கருத்துப் பரிமாற்றம் நடைபெறுகிறதென்றால் அதற்குக் காரணம் உருபனமைப்பே. ஏனெனில் உருபன்கள் பொருளை உணர்த்துகின்றன. இவ்வுருபனியல் ஒலியனியலையும் பொருண்மை இயலையும் இணைக்கும் பாலமாகச் செயல்படுகின்றது. எனவே, உருபனியல் பற்றிய ஆய்வு அவசியமான ஒன்று. இக்கட்டுரை குணவீர பண்டிதரால் எழுதப்பெற்ற நேமிநாதத்தில் உருபனியல் கூறுகள் வெளிப்படும் பாங்கு ஆராயப்பட்டுள்ளது. இதில் நைடா கூறும் விதிகள், மொழியியலார் குறிப்பிடும் உருபன்களின் வகைகள், கட்டு வடிவமான ஒட்டுகள், பெயரடை, வினையடை, திணை - பால் - எண் - இடப் பகுப்புகள், காலம், வேற்றுமை, பெயர்ச்சொல், வினைச்சொல், சொல்லடுக்கு உள்ளிட்ட உருபனியல் கூறுகள் ஆராயப்படுகின்றன. இக்கூறுகள் குணவீர பண்டிதரின் மொழியியல் சிந்தனையை வெளிப்படுத்துகின்றன எனும் கருதுகோளை முன்வைத்து இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

திறவுச் சொற்கள்:

                மொழியியல், உருபனியல், குணவீர பண்டிதர், நேமிநாதம்.

முன்னுரை

                குணவீர பண்டிதரால் எழுதப்பெற்ற இலக்கண நூல் நேமிநாதம் ஆகும். சமண சமயத் தீர்த்தங்கர்களுள் ஒருவர் நேமிநாதர் ஆவார். இந்நூல் அவரது பெயரால் செய்யப்பெற்றது. இதற்குச் சின்னூல் என்ற சிறப்புப்பெயரும் உண்டு. இஃது எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என ஈரதிகாரங்களைக் கொண்டது. எழுத்ததிகாரம் எனப் பெயர் இருப்பினும் அவ்வதிகாரமே இயலாக அமைந்துள்ளது. இவ்வதிகாரம் 24 வெண்பாக்களைக் கொண்டது. அடுத்துள்ள சொல்லதிகாரம் மொழியாக்க மரபு, வேற்றுமை மரபு, உருபு மயங்கியல், விளி மரபு, பெயர் மரபு, வினை மரபு, இடைச்சொல் மரபு, உரிச்சொல் மரபு, எச்ச மரபு என ஒன்பது உட்பிரிவுகளைக் கொண்டது. இவ்வொன்பதும் தொல்காப்பியச் சொல்லதிகார இயல்களின் பெயரினைப் பெரிதும் ஒத்துள்ளன. இவ்வதிகாரத்தில் 71 வெண்பாக்கள் உள்ளன. சோழர் காலத்திய மொழியமைப்பை விளக்கும் நூலாக இது திகழ்கின்றது. இதன் காலம் கி.பி.985-க்கும் கி.பி.1014க்கும் இடைப்பட்டது. இத்தகைய சிறப்புடைய நேமிநாதம் வழிக் குணவீர பண்டிதரின் உருபனியல் சிந்தனைகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

உருபனியல் - அறிமுகம்

                நாம் பேசும் மொழி ஒலிகளால் ஆனது. அவ்வொலிகள் இணைந்து பொருளுடைய சொற்களையும் வாக்கியங்களையும் உருவாக்குகின்றன. அவ்வாறு இல்லையேல் எத்தனை ஒலிகள் சேர்ந்தாலும் பயனில்லை. இக்கருத்தை உணர்ந்தே மரபிலக்கணங்கள் தோன்றின. ஒலிகளை எவ்வாறு சேர்க்க வேண்டும்?, அவ்வாறு சேரும்போது எத்தகைய சொற்கள் உருவாகும்?, அச்சொற்களின் பொருள் யாது? என்பதை எல்லாம் உணர்ந்தே இலக்கணிகள் இலக்கணங்களை எழுதினர். எனவே, மொழி ஆராய்ச்சியில் இலக்கணத்தின் பங்கு இன்றியமையாதது. இது மொழியின் அமைப்பை ஒலியியல் (Phonetics), ஒலியனியல் (Phonemic), உருபனியல் (Morphology), தொடரியல் (Syntax) என்ற அடிப்படையில் விளக்குகின்றது. மொழியின் ஒலி அமைப்பை ஒலியனியலும் சொல்லமைப்பை உருபனியலும் தொடரியலும் ஆராய்கின்றன. மொழியில் ஒலியும் உருபனும் அடிப்படை அலகுகளாக் (Basic Units) கருதப்பெறுகின்றன. சொற்களின் ஆக்கத்திற்கு இத்தகைய அலகுகள் மிக அவசியம். ஏனெனில் மொழி பல்வேறு ஒலிக்கூறுகளைக் கொண்டது. இவ்வொலிக்கூறுகள் இணைந்து சொற்களாகின்றன. இச்சொற்கள் ஒன்றிணைந்து தொடர்களாகின்றன. இத்தொடர்களை உருவாக்கும் சொற்களைப் பகுத்துக் கொண்டே சென்றால் கிடைக்கும் மிகச் சிறிய பொருளுள்ள ஒலியக் கூறு உருபனாகும். இது சொற்பொருளையும் இலக்கணப் பொருளையும் காட்டுவதாக அமையும். ஒரு சொல்லில் ஒன்றிற்கு மேற்பட்ட உருபன்கள் (மரங்கள்) வரலாம். இவ்வுருபன்களின் இயல்புகள் பற்றி முத்துச்சண்முகன் கூறுகையில், “உருபன் ஒலியன்களால் ஆயது. அதில் ஒன்றோ, பலவோ ஒலியன்கள் இருக்கலாம். இவ்வொலியக்கூறு மறித்து வரும் இயல்புடையது. பொருள் தரும் மிகச் சிறிய ஒலியக்கூறு. அது சொல்லாகவோ, அசையாகவோ, அசையின் கூறாகவோ இருக்கலாம். ஆனால், எல்லாச் சொல்லும் அசையும் அதன் கூறும் உருபன்களே என்று கூற முடியாது. இரண்டு உருபன் ஒரே வடிவுடையதாகவும் ஒரு சொல்லில் உருபன்கள் ஒரு குறிப்பிட்ட முறையிலேயே வரும்” (முத்துச்சண்முகன், 2010:117) என்கின்றார். இவரது இக்கூற்று உருபன்களின் இயல்புகளை விளக்கவல்லதாக அமைகின்றது. இவ்வுருபன்களின் ஆராய்ச்சியில் சசூர், வில்லியம் ஹாரீஸ், நைடா, பிளாக், ஹாக்கட் ஆகியோர் குறிப்பிடத்தக்கோர். இவர்கள் உருபனியல் தொடர்பான கொள்கைகளை உருவாக்கினர். அவர்களுள் நைடாவின் ஆறு விதிகள் இன்றும் பேசப்படுகின்றன. இவற்றை Morphology: A Descriptive Analysis of word (1946) என்ற நூலில் காணலாம். அவ்விதிகளுள் எவை நேமிநாதத்தோடு பொருந்தி வருகின்றன? எனக் காண்பதே இப்பகுதியின் நோக்கம்.

நேமிநாதமும் உருபன்களைக் கண்டறியும் விதிகளும்

               ஒரு குறிப்பிட்ட ஒலி வடிவம் தன் எல்லா வருகையிலும் ஒரே பொருளை உணர்த்தி வருமாயின் அதனை ஓர் உருபனாகக் கொள்ளலாம் என்பது நைடாவின் முதல் விதி. இவ்விதியைப் பெரும்பாலான மரபிலக்கணக்காரர்களிடமும் காணலாம். அன், ஆன், அள், ஆள், அர், ஆர், ப, து, று, டு, அ, ஆ, வ, உள்ளிட்ட ஐம்பால்களின் இறுதி நிலைகளைக் கூறும்போது குணவீர பண்டிதரால் கையாளப்பட்டுள்ளது (நேமி.29) எனலாம். இவ்விகுதிகள் எல்லா இடத்தும் ஒரு பொருளையே உணர்த்துகின்றன.

-அன்                   நடந்தனன், சென்றனன், படித்தனன்       

-ஆன்                  நடந்தான், சென்றான், படித்தான்               

 -அள்                  நடந்தனள், சென்றனள், படித்தனள்

-ஆள்                  நடந்தாள், சென்றாள், படித்தாள்

-அன், -ஆன், -அள், -ஆள் என்ற ஒலி வடிவங்கள் எல்லா இடங்களிலும் ஒரே பொருளையே தந்துநிற்கின்றன.

இவை தவிர, -கள் ஈறு பற்றிக் கூறும்போது, .............ஓங்கிய, கள்ளொடு வந்தால் இருதிணைக்கும் பன்மைப்பால், ஒள்ளிழையாய் தோன்றலும் உண்டு (நேமி.61) என்கின்றார். அரசர்கள், அமைச்சர்கள், மரங்கள், கால்கள் என்பவற்றில் வரும் -கள் விகுதி பன்மையைக் காட்டும் உருபு. இவ்வுருபு ஒரே பொருளையும் ஒரே மாதிரியான ஒலியன்களையும் கொண்டது. எனவே, -கள் உருபை ஓர் உருபனாகக் கருதலாம்.

                 நைடாவின் மற்றொரு விதி நேமிநாதத்திற்குப் பொருந்தி வருகின்றது (நேமி.85,87). உருபன்கள் தனித்து வருதல், பிறவற்றோடு இணைந்து வருதல், ஒரு குறிப்பிட்ட தொகைச்சொல்லின் ஒரு பகுதி தனித்தோ அல்லது பிற உருபனோடு சேர்ந்தோ வருதல் - முதலானவற்றை உருபனாகக் கருதும் வாய்ப்புண்டு. பொற்றொடி வந்தாள் எனும் தொகைச்சொல்லைப் பிரித்தால் (அன்மொழித் தொகை) “பொன் + தொடி” என வரும். அதுபோலவே செங்கால் எனும் பண்புத்தொகையைப் பிரித்தால் “செம்மை + கால்” என வரும். இவை உருபனாகக் கருதப்படும்.

உருபன்களின் வகைகள்

                மொழியில் உள்ள உருபன்களை உருவம், வருமிடம், இணைக்கப்படும் விதம் என்ற அடிப்படையில் கட்டுருபன், கட்டிலா உருபன் (தனி உருபன்), தொடர் உருபன், தொடரா உருபன், கட்டாய உருபன், கட்டாயமில்லா உருபன், இணைப்பு உருபன், குறைப்பு உருபன், இரட்டைக்கிளவி, முழுமை உருபன், முழுமை தரா உருபன், மையக்கரு உருபன், மையக்கரு இல்லா உருபன் (வி.கீதா & இர.லலிதாராஜா, 2007:112) எனப் பலவாறாக வகைப்படுத்தலாம். இவ்வகைகளை நேமிநாதத்தோடு இனிப் பொருத்திப் பார்க்கலாம்.

கட்டுருபன் (Bound Morpheme)

               மொழியில் தனித்து நின்று செயல்படாமல், பிற உருபுகளைச் சார்ந்து நின்று செயல்படக் கூடிய உருபன் கட்டுருபன் ஆகும். தமிழில் பெரும்பாலும் கட்டுருபன்களே அதிகம். வேற்றுமையுருபுகள், கால இடைநிலைகள், சாரியைகள், தத்தம் குறிப்பில் பொருளுணர்த்தும் இடைச்சொற்கள், பால் காட்டும் ஈறுகள், வினை ஈறுகள் முதலானவை கட்டுருபன்களாகவே உள்ளன. இவை சொற்பொருளை உணர்த்தாமல், இலக்கணப் பொருளையே உணர்த்துகின்றன. குணவீர பண்டிதர் இவ்வுருபன் பற்றித் தரும் சூத்திரங்கள் வருமாறு:-

பால், எண் காட்டும் ஈறுகள் : அன், ஆன், அள், ஆள், அர், ஆர், ப, து, று, டு, அ, ஆ, வ (நேமி.29)

வேற்றுமையுருபுகள் : ஐ, ஒடு, கு, இன், அது, கண் (நேமி.40)

உளப்பாட்டுத் தன்மை : அம், ஆம், எம், ஏம், கும், டும், தும், றும் (நேமி.64)

தனித்தன்மை : கு, டு, து, று, என், ஏன் (நேமி.64)

இவை தவிர இடைச்சொற்களும் உரிச்சொற்களும் தனித்து நிற்காமல் பெயருடனோ வினையுடனோ இணைந்து நின்றே தமக்கான பொருளை உணர்த்துகின்றன.

கட்டிலா உருபன்

                  தனித்து இயங்கும் ஆற்றலுடைய உருபன்கள் கட்டிலா உருபன்களாகும். தமிழில் உள்ள பெயர்ச்சொற்களும் வினைச்சொற்களும் இதில் அடங்கும். குணவீர பண்டிதர், குலம், தொழில் (நேமி.55), சாதி, பெண், மாந்தர், மக்கள் (நேமி.56), தந்தை, தாய், மகன், மகள், நீ, நீயிர் (நேமி.59) முதலிய பெயர்களையும் நெடியன், உடையன், நிலத்தன், இளைஞன், கடியன், மகத்தன், கரியன், தொடியன் (நேமி.71), கரிது, அரிது, தீது, கடிது,நெடிது, பெரிது, உடைத்து, வெய்து, பிறிது, பரிது (நேமி.72) முதலிய வினைகளையும் குறிப்பிட்டுள்ளார். இவையெல்லாம் கட்டிலா உருபன்களாகும்.

 

 

தொடர் உருபன்

                உருபன்களின் தொடர்ச்சியை வைத்து இது வகை பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட தொடரில் இடம்பெறும் கூறுகள் சிதைவுபடாமல் இருக்கவே இவ்வகை உருபன்கள் பயன்படுத்தப்பெறுகின்றன. கால இடைநிலைகள், விகுதிகள், வேற்றுமையுருபுகள் அனைத்தும் தொடர் உருபன்களாகக் கருதப்பெறுகின்றன. கால இடைநிலைகள் பற்றிக் குணவீர பண்டிதர் குறிப்பிடவில்லை. ஆனால், காலத்தின் வகைகளைச் சுட்டிக் காட்டியுள்ளார். சான்றாக: வந்தான் என்பதில் வரும் -ஆன் உருபன் தொடர் உருபன் ஆகும். இதைப் போலவே, வீட்டை என்பதில் வரும் -ஐ வேற்றுமையுருபு தொடர் உருபன் ஆகும்.

தொடரா உருபன்

               உருபனோடு இணைந்து வழங்கும் கூறுகள் இடம்விட்டு இடம் அமைந்து மொழியில் வழங்கும்போது அது தொடரா உருபன் என்றழைக்கப்படுகின்றது. நேமிநாதம் குறிப்பிடும் -உம் இடைச்சொல், ஏகார இடைச்சொல், ஓகார இடைச்சொல் (நேமி.76, 79) ஆகியவை தொடரா உருபன்களாகக் கருதலாம்.

உம் இடைச்சொல் (......உம்........உம்.........உம்) - நிலனும் நீரும் தீயும் வளியும் ஆகாயமும் - எண்ணும்மை.

ஏகார இடைச்சொல் (..........ஏ............ஏ..........ஏ) - நிலனே நீரே தீயே வளியே ஆகாயமே - எண்ணேகாரம்

ஓகார இடைச்சொல் (........ஓ..............ஓ...........ஓ) - இராதாவோ சீதாவோ கவிதாவோ - எண்ணோகாரம்

இச்சான்றுகளெல்லாம் தொடரா உருபன்களாக -உம், -ஏ, -ஓ ஆகியவை திகழ்கின்றன என்பதைக் காட்டுகின்றன.

கட்டாய உருபன்

                 பால் விகுதியை உணர்த்த ஓர் உருபனியல் அமைப்பில் கட்டாயமாக அமைய வேண்டிய உருபன் கட்டாய உருபன் ஆகும். அதாவது, சொற்களில் வரும் உருபன்களில் எவ்வுருபனை நீக்கினால் அச்சொல் பொருளற்றதாகி விடுமோ, அத்தகைய உருபன்களே கட்டாய உருபன்களாகும். நேமிநாதம் வேற்றுமையுருபுகள் (நேமி.40), பால், எண் காட்டும் ஈறுகள் (நேமி.29), தன்மை, முன்னிலை, படர்க்கை வினைமுற்று ஈறுகள் (நேமி.64, 65, 66, 67) ஆகியவற்றைக் குறிப்பிடக் காணலாம். இவற்றைக் கட்டாய உருபன்களாக எண்ண இடமுண்டு. ஏனென்றால், இவ்வுருபன்களை நீக்கினால், அச்சொல்லின் பொருள் இல்லாமல் போய்விடக்கூடும். “உண்டனம்” என்ற சொல்லில் உள்ள -அம் ஈறை நீக்கினால் அச்சொல் பொருளின்றி நிற்பதைக் காணலாம்.

இரட்டைக்கிளவிகள்

                சொற்களின் ஒரு குறிப்பிட்ட ஒலியன் வடிவமோ அல்லது ஒலியன்களின் சேர்க்கை வடிவமோ இருமுறையாக வந்தமைந்து ஒரு குறிப்பிட்ட பொருளை வெளிப்படுத்துமாயின் அவ்வுருபன்களை இரட்டைக்கிளவிகள் எனலாம். இவ்வாறு இரட்டித்து வரும் உருபனின் ஒரு பகுதியை நீக்கினால் அச்சொல் பொருளற்றதாகிவிடும். இச்சொற்களைப் பற்றிக் குணவீர பண்டிதர் கூறுகையில், “.........தாம் பிரியா ஏந்திரட்டைச் சொற்கள் இரட்டு” (நேமி.74) என்கின்றார். இவ்வுருபன்களுக்குச் சான்றுகள் வருமாறு: திடுதிடு என்றது, மொடுமொடு என்றது, கொறுகொறுத்தார், சரசரென்றது, துடிதுடித்து. இவ்வாறாக, நேமிநாதத்தில் உருபன்களின் வகைகள் பொருந்தி வருகின்றன.

வேர் உருபன்கள் (Root Morphemes)

                இவ்வுருபன்களை உரிச்சொற்களாகக் கருதலாம். இவ்வுரிச்சொற்கள் இசை, பண்பு, குறிப்பு ஆகியவற்றை உணர்த்தவல்லனவாக அமையும். சிலபோது இவை வினைச்சொற்களாகவும் பெயர்ச்சொற்களாகவும் வரக்கூடும். இது பற்றி நேமிநாதம் குறிப்பிடுகையில்,

ஒண்பேர் வினையோடுந் தோன்றி உரிச்சொலிசை

பண்பு குறிப்பாற் பரந்தியலும் (நேமி.80) என்கின்றது.

கடி என்ற உரிச்சொல்லை (நேமி.82) வேர் உருபனாகக் கருதலாம். ஏனென்றால், கடியார் கலுழி நீந்தி, கண்ணாடி அன்ன கடிமார்பன், கடிமலர்ப் பிண்டி ஆகிய சான்றுகளில் வரும் கடி என்பது வேர் உருபனாகும். இது பற்றித் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் குறிப்பிடுகையில், “சொல்லின் கருவாக அமையும் அடிச்சொல்லையே உரிச்சொல் குறிக்கின்றது” (தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், 1974:123) என்கின்றார். இவ்வுருபன் பெயரையும் வினையையும் சிறப்பிக்கும் அடையாகவும் (Attribute) வரப்பெறுகின்றது.

வேரல்லா உருபன்கள் (Non - Root Morphemes)

                 இவ்வுருபன்களுள் நேமிநாதம் குறிப்பிடும் இடைச்சொற்களை அடக்கலாம். சாரியைகள், வேற்றுமையுருபுகள், தத்தம் குறிப்பிற் பொருள் உணர்த்துவன, அசைச்சொற்கள், வினை ஈறுகள், இசைநிறைகள் (நேமி.75) என்பன வேரல்லா உருபன்களாக எண்ணப்படுகின்றன. மன் இடைச்சொல் ஆக்கம், கழிவு, ஒழியிசை ஆகிய பொருள்களை உணர்த்துகின்றது. பண்டுகாடுமன், ஈன விழிவினான் வாழ்வேன்மன், பண்டு கூரியதோர் வாண்மன் ஆகிய சான்றுகளில் வரும் மன் இடைச்சொல் வேரல்லா உருபனாகும்.

ஒட்டுகள்

                 அடிச்சொற்கள் அல்லது வேர்ச்சொற்களுடன் இணையும் கட்டுநிலை உருபன்களையே ஒட்டுகள் (Affixes) என்கின்றோம்.இவ்வொட்டுகள் இலக்கணப் பொருளை உணர்த்தவல்லவை. இது பற்றிக் கு.பரமசிவம் கூறுகையில், “கட்டுண்ட உருபன்கள் வேறு உருபன்களோடு ஒட்டப்படுவதனால் ஒட்டுக்கள் என்னும் பெயரைப் பெறுகின்றன” (கு.பரமசிவம், 2011:265) என்கின்றார். தமிழ்மொழி ஒட்டுநிலை மொழி என்பது நாம் அறிந்ததே. ஏனெனில் தமிழ்மொழியில் ஏராளமான ஒட்டுகள் உள்ளன. மொழியியலார் ஒட்டுகளை முன்னொட்டு, உள்ளொட்டு, பின்னொட்டு என்று பிரிப்பார்கள் (கு.பரமசிவம், 2011:265). முன்னொட்டுகள் வடமொழியில் இருந்து கடன் வாங்கப் பெற்ற சில சொற்களில் (நீதி - நீதி, நியாயம் - நியாயம்) உள்ளன. உள்ளொட்டுகள் தமிழில் இல்லை. பின்னொட்டு என்பது அடிச்சொற்களுக்குப் பின் சேர்க்கப்படும் ஒட்டுகளையே குறிக்கும். தமிழில் உள்ள விகுதிகள் இவ்வகையில் அடங்கும். நேமிநாதம் ஐம்பால்களுக்குரிய விகுதிகளையும் (நேமி.29) உயர்திணை, அஃறிணைக்குரிய பெயரீறுகளையும் (நேமி.55, 56, 57, 61) உளப்பாட்டுத் தன்மை, தனித்தன்மை வினைமுற்று ஈறுகளையும் (நேமி.64) படர்க்கை வினைமுற்று ஈறுகளையும் (நேமி.65, 66) முன்னிலை வினைமுற்று ஈறுகளையும் (நேமி.67) உம், ஏ, ஓ ஆகிய இடைச்சொற்களையும் (நேமி.76, 79) குறிப்பிடக் காணலாம். இவையெல்லாம் பின்னொட்டுகள் ஆகும். உதாரணத்திற்குச் சில காட்டுவாம். ஆன் - சென்றான், து - சென்றது, அம் - நின்றனம், அல் - உண்பல், ஆள் - உண்டாள், மின் - உண்மின், உம் - தீதும் நன்றும் பிறர் தர வாரா, ஏ - நிலனே நீரே, ஓ - யானோ அரசன்.

இலக்கணப் பிரிவுகள் (Grammatical Categories)

                 மொழியின் அமைப்பில் முக்கியமான இடத்தைப் பெறுவன இலக்கணப் பிரிவுகளாகும். இவை மொழியின் அமைப்பைப் பொருளோடு விளங்கிக் கொள்வதற்குப் பயன்படுகின்றன. பெயரும் வினையும் முதன்மை இலக்கணப் பிரிவுகளாகும். பெயரடை, வினையடை, இடைச்சொல், உரிச்சொல் உள்ளிட்டவை சார்பு இலக்கணப் பிரிவுகளாகும். இவை முதன்மை இலக்கணப் பிரிவுகளைச் சார்ந்தே செயல்படும் ஆற்றலுடையவை. தமிழ் இலக்கண நூல்கள் அடைகளைத் தனிச் சொல்வகையாகக் கூறவில்லை. ஆனால், ஆங்கில மொழியில் அடைகள் தனிச் சொல்வகையாகக் கொள்ளப்பட்டுள்ளது கண்கூடு. இப்பகுதியில் குணவீர பண்டிதர் கூறும் அடைகள் பற்றிக் காணமுற்படலாம்.

 

அடைகள்

                 மரபிலக்கணக்காரர்கள் பெயரடை, வினையடை ஆகியவற்றைத் தனித்தனிச் சொல் வகையாகக் கொள்ளவில்லை என்றாலும் அவை பற்றிக் கூறாமல் இல்லை. பெயரெச்சம், வினையெச்சம் என்ற பெயர்களில் குறிப்பிட்டுள்ளன. குணவீர பண்டிதர் அடை பற்றிக் கூறுகையில்,

“இனமின்றிப் பண்புடாஞ் செய்யுள் வழக்கேல்

இனமுண்டாய்ப் பண்புவந் தெய்தும் - புனையிழாய்

திண்ணம் அடையுஞ் சினையும் முதலுமாய்

வண்ணச் சினைச்சொல் வரும் (நேமி.39) என்கின்றார்.

இச்சூத்திரத்தில் பண்புச் சொல் பெயர் பற்றியும் அடைச்சொல் பெயர் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். வெண்கோட்டி யானை - பண்பு, செங்கால் நாரை - வண்ணச் சினைச்சொல். இவை அடைகளாகக் கருதப்படுகின்றன.

பெயரடை

                பெயரடை (Adjective) தொடரியல் அடிப்படையிலான ஒரு சொல் வகையாகும். இது பெயருக்கு முன்னால் நிற்கும் தன்மையது. அதாவது, பெயர்த்தொடரில் தலைப்பெயருக்கு முன்னதான இடத்தில் அதன் அடையாக வரும் (சு.சக்திவேல் & ச.இராஜேந்திரன், 1994:38). இது ஐம்பாலுக்கும் பொதுவானது. வினைப்பகுதி + கால இடைநிலை + அ விகுதி என்ற அமைப்பில் வரப்பெறும். எண்ணுப்பெயர் பெயரடையாக வரும்போது திரிந்து வரும். இலக்கணிகள் இதனைப் பெயரெச்சமாகக் கருதுவர். குணவீர பண்டிதர் பெயரடை பற்றிக் கூறுகையில், ஆறன்மேற் செல்லும் பெயரெச்சம் (நேமி.69) என்கின்றார். செய்யும், செய்த எனும் பெயரெச்சங்கள் இரண்டும் நிலம், பொருள், காலம், கருவி, வினைமுதல், செயல் எனும் ஆறிடத்தும் நடக்கும் தன்மையின. செய்த எனும் வாய்பாட்டுப் பெயரெச்சமே பெயரடையாகக் கருதப்பெறுகின்றது. இது தெரிநிலை, குறிப்பு என இரண்டு வகைப்படும். அடித்த மாணவன், நல்ல மனிதன், பெரிய மரம் ஆகிய சான்றுகளில் வரும் அடித்த, நல்ல, பெரிய என்பன தனிநிலைப் பெயரடைகளாக எண்ணப்பெறுகின்றன. தெரிநிலை, குறிப்பு என்ற வகைப்பாட்டைக் குணவீர பண்டிதர் கொள்ளவில்லை. பெயரெச்சம் என்ற பொது சொல்லால் மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.

வினையடை

                ஒரு வினைச்சொல்லைச் சிறப்பித்து வரக்கூடிய சொல்லை வினையடை (Adverb) என்கின்றோம். இலக்கணிகள் வினையெச்சத்தை வினையடைகளுள் ஒரு பிரிவாகவே கருதுகின்றனர். இது காலத்தைக் காடடுவதாக அமையும். இதன் அமைப்புப் பற்றி அ.பரணி ராணி கூறுகையில், “பண்பு அடிச்சொல்லோடு வினையடை விகுதிகளாகிய அ, உ என்பன சேர்ந்து வினையடைகள் தமிழில் உருவாகின்றன” (அ.பரணி ராணி, 2013:318) என்கின்றார். மிக வருந்தி, நன்கு பேசினார் ஆகிய சான்றுகளில் வரும் மிக (அ), நன்கு (உ) என்பன வினைச்சொற்களைச் சிறப்பித்து வருகின்றன. குணவீர பண்டிதர் 12 வினையெச்சங்களைக் குறிப்பிட்டுள்ளார் (நேமி.68). அவற்றுள் செய்து, செய எனும் வாய்பாட்டு வினையெச்சங்கள் மட்டுமே வினையடைகளாகக் கருதப்பெறுகின்றன.

இலக்கணக் கூறுகள் (Grammatical Features)

               இலக்கணக் கூறுகள் என்பவை சொல்வகைப்பாட்டிற்கு உதவக் கூடியவை. திணை, பால், எண், இடம், வேற்றுமை, காலம் உள்ளிட்டவை அடிநிலை இலக்கணக் கூறுகளாகக் கருதப்பெறுகின்றன. இவை வாக்கியத்தில் வருவதை அடிப்படையாக வைத்து எழுவாய், பயனிலை போன்ற செயல்நிலை இலக்கணக் கூறுகள் தோன்றுகின்றன.

திணையும் பாலும்

                 குணவீர பண்டிதர் திணையை உயர்திணை என்றும் அஃறிணை என்றும் இரண்டாகப் பகுக்கின்றார். உயர்திணையில் மக்கள், நரகர், வானோர் ஆகியோர் அடங்குவர் என்றும் அஃறிணையில் உயிருள்ளனவும் உயிரில்லனவும் அடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார் (நேமி.27). திணையுள் பாலும் அடங்கும் என்பது தமிழ் இலக்கண மரபு. அதன் அடிப்படையில் ஒருவன், ஒருத்தி, பலர், ஒன்று, பல எனும் ஐந்தும் பாலுள் அடங்கும். ஒருவன், ஒருத்தி, பலர் என மூன்றும் உயர்திணையின் பாற்படும். ஒன்று, பல என இரண்டும் அஃறிணையின் பாற்படும் என்பார் குணவீர பண்டிதர் (நேமி.28). இச்சூத்திரங்களைத் தொடர்ந்து அன், ஆன், அள், ஆள், அர், ஆர், ப முதலிய ஈறுகளை உயர்திணைக்குரியனவாகவும் து, று, டு, அ, ஆ, வ முதலிய ஈறுகள் அஃறிணைக்குரியனவாகவும் குணவீர பண்டிதர் பட்டியலிட்டுள்ளார் (நேமி.29).

எண்

                  தமிழ் மற்றுமுள்ள திராவிட மொழிகளில் ஒருமை, பன்மை என்னும் இரு வகையான எண் பாகுபாடே காணப்படுகின்றது. வடமொழியிலும் வேறு பல மொழிகளிலும் ஒருமை, இருமை, பன்மை என்னும் மூவகை எண் பாகுபாடு காணப்படுகின்றது. ஒன்றுக்கு மேற்பட்ட அனைத்தும் தமிழில் பன்மையாகவே கருதப்படுகின்றன (ச.சுபாஷ் சந்திரபோஸ், 2018:34). எண் பாகுபாடு பற்றித் தனியாகச் சூத்திரம் எதுவும் செய்யவில்லை குணவீர பண்டிதர். ஆனால், எண் பாகுபாட்டைப் பலவிடங்களில் வலியுறுத்திப் பேசியுள்ளார். இரண்டிடத்தால் (நேமி.26), பன்மைச் சிறப்பால் (நேமி.32), எண்ணினாற் றன்மையாம் (நேமி.34), எண்ணொருமை (நேமி.37), உயர்திணைப் பாலொருமை (நேமி.62), பன்மை ஒருமைப் படர்க்கையாம் (நேமி.66), முன்னிலைப் பன்மை, ஒருமைக்கண் முன்னிலையாம் (நேமி.67) உள்ளிட்ட இடங்களில் எல்லாம் எண் பாகுபாட்டைக் காணலாம். ஆண், பெண், ஒன்று என்பன ஒருமையிலும் பலர், பல என்பன பன்மையிலும் அடங்கும். இவற்றைக் காட்டும் வினைமுற்றுகளையும் அவ்வாறே கொள்ள வேண்டும்.

இடம்

                  தமிழில் இடம் என்பது தன்மை, முன்னிலை, படர்க்கை என மூவகைப்படும். குணவீர பண்டிதரின் கருத்துப்படி, தன்மை இடத்தைக் குறிக்கும் வினைமுற்றுகள் உயர்திணையில் அடங்கும். தன்மை வினைமுற்றுகளில் ஒருமை, பன்மையை உணர்த்தும் எண் மட்டுமே உண்டு. திணை, பால் பாகுபாடு இல்லை. தன்மையைக் குணவீர பண்டிதர் உளப்பாட்டுத் தன்மை, தனித்தன்மை என்று இரண்டாகப் பகுத்து அவற்றிற்குரிய ஈறுகளைச் சுட்டிக்காட்டியுள்ளார் (நேமி.64). முன்னிலை இடப்பெயர்களும் வினைமுற்றுகளும் இருதிணைக்கும் பொதுவாக வழங்கப்படுவதால் விரவுத் திணையில் சேர்த்துள்ளார் குணவீர பண்டிதர் (நேமி.59), (நேமி.67). படர்க்கை இடத்தில் ஒருவன், ஒருத்தி, பலர் என்பவை உயர்திணையிலும் ஒன்று, பல என்பன அஃறிணையிலும் அடங்கும் (நேமி.66). தமிழ்மொழி ஒட்டுநிலை மொழி என்பதால் பெரும்பாலான வினைமுற்று ஈறுகளிலிருந்து இடங்காட்டும் உருபைக் கண்டறிந்து கொள்ளலாம்.

காலம்

                  குணவீர பண்டிதர் இறப்பு, நிகழ்வு, எதிர்வு என மூவகைக் காலங்களைக் கூறியுள்ளார் (நேமி.63). ஆனால், மூவகைக் காலங்களைக் காட்டும் கால இடைநிலைகளைக் கூறவில்லை. தொல்காப்பியர் நெறியைப் பின்பற்றியே இவர் செய்துள்ளார் எனலாம். ஆனால், நன்னூல் இக்குறையைப் போக்கும் நோக்கத்தில் கால இடைநிலைகளைக் குறிப்பிட்டுள்ளளது ஈண்டு நினைவுகூரத்தக்கது.

 

வேற்றுமை

                     ஒரு பெயர்ச்சொல்லை வினைமுற்றோடு தொடர்புபடுத்தும்போது வேற்றுமை அமைகின்றது. இது வேற்றுமைப் பொருளை உணர்த்துவதற்காகப் பெயருக்கு இறுதியில் சேர்க்கப்படும் வேற்றுமையுருபினைக் (Case Marker) கொண்டது. தமிழ் மொழியிலுள்ள வேற்றுமை (Case) இலக்கணக் கூறுகளுள் ஒன்றாகும். உலக மொழிகள் பலவற்றில் இக்கூறுகள் காணப்பெறுகின்றன. குணவீர பண்டிதர் வேற்றுமை பற்றி வேற்றுமை மரபு, உருபு மயங்கியல், விளி மரபு ஆகிய இயல்களில் கூறியுள்ளார். வேற்றுமைகள் எட்டு. அவற்றுள், முதல் வேற்றுமைக்கும் விளி வேற்றுமைக்கும் உருபு இல்லை. பிற வேற்றுமைகளுக்கு உருபு உண்டு. இது பற்றிக் குணவீர பண்டிதர்,

“காண்டகுபேர் ஐஒடுகு இன்அது கண்விளியென்

றீண்டுரைப்பின் வேற்றுமை எட்டாகும் - முண்டவைதாம்

தோற்றும் பெயர் முன்னர் ஏழுந் தொடர்ந்தியலும்

ஏற்ற பொருள்செய் யிடத்து (நேமி.40) என்கின்றார்.

ஆ செல்க - எழுவாய் வேற்றுமை

ஊரைக் காக்கும் - இரண்டாம் வேற்றுமை

வாணிபத்தான் ஆயினான் - மூன்றாம் வேற்றுமை

புலியொடு பொருத யானை - மூன்றாம் வேற்றுமை

கரும்பிற்கு வேலி - நான்காம் வேற்றுமை

பனையின் வீழ் பழம் - ஐந்தாம் வேற்றுமை

யானையது கோடு - ஆறாம் வேற்றுமை

ஊர்க்கண் இருந்தான் - ஏழாம் வேற்றுமை

நங்கை - நங்காய் - விளி வேற்றுமை 

பெயர்ச்சொல்

                 சொல் வகைகளுள் முதன்மையாக அமைவது பெயர்ச்சொல்லாகும். இது பொருளைப் பற்றியும் பொருளினது தன்மை பற்றியும் கூறுவதால் மொழியியலார் பெயர்ச்சொல்லையே ஒரு மொழியின் ஆதாரச் சொல்லாகக் கொண்டனர் (ந.சங்கரநாராயணன், 2015:38). ஆஷர் என்ற மொழியியலார் பெயர்ச்சொல்லை உருபனியல் மற்றும் தொடரியல் அடிப்படையில் சொல் வகுப்பாக நிறுவுகின்றார் (சு.சக்திவேல் & ச.இராஜேந்திரன், 1994:31). இச்சொற்கள் உருபனியல் அடிப்படையில் வேற்றுமையுருபுகளையும் (பின்னொட்டு) பன்மை ஒட்டுகளையும் ஏற்கவல்லன. குணவீர பண்டிதர் பெயர்ச்சொற்களை உயர்திணைப்பேர், அஃறிணைப்பேர், விரவுப்பேர் என மூன்றாகப் பகுக்கின்றார் (நேமி.54). உயர்திணைப்பேர்களுள் சுட்டு, வினா, ஒப்பு, பண்பு, ன, ள, ர ஈற்றுப் பெயர்கள், எண்ணியற்பேர், நிலப்பேர், கூடியற்பேர், காலப்பேர், குலப்பேர், தொழிற்பேர், மகடூஉ, ஆடூஉ, சாதி, மாந்தர், மக்கள், தன்மைப்பேர் (நேமி.55, 56) என்பனவும் அஃறிணைப்பேர்களுள் உகர, ஐகார ஈற்றுச் சுட்டுப்பேர்கள், எண்ணின் பேர், உவமைப்பேர், சாதிப்பேர், வினாப்பேர், உறுப்பின் பேர் (நேமி.57) என்பனவும் விரவுப்பேர்களுள் இயற்பேர், சினைப்பேர், சினைமுதற்பேர், தந்தை, தாய், மகன், மகள், நீ, நீயிர் (நேமி.58, 59) என்பனவும் அடங்கும். இவ்வகைப்பாட்டுள் விரவுப்பேரும் அஃறிணைப்பேரும் பெயரையும் வினையையும் கொண்டன்றிப் பால் தோன்றா. அஃறிணைப்பேர் கள்ளொடு வந்தால் பன்மைப்பால் தோன்றும். உயர்திணை ஒருமைப்பேரும் ஓரோவழிக் கள்ளொடு வந்தாற் பன்மைப்பால் தோன்றுவனவும் உள (நேமி.61) என்கின்றார் குணவீர பண்டிதர்.

 

 

வினைச்சொல்

                ஒரு செயலினைக் குறித்து வரும் சொல் வினைச்சொல் ஆகும். பொருளினது புடைப்பெயர்ச்சியே வினை யெனப்படும் எனத் தமிழ் இலக்கணிகள் கூறுவர். அவன் சென்றான், அவள் ஓடினாள், அது சென்றது உள்ளிட்ட சான்றுகளில் வரும் சென்றான், ஓடினாள், சென்றது என்பன வினைச்சொற்களாகும். இவை முறையே செல்லுதல், ஓடுதல் ஆகிய செயல்களைக் குறித்து வருகின்றன. இவற்றின் வினையடிகள் செல், ஓடு.

வினைச்சொற்களின் பொதுவிலக்கணம் பற்றிக் குணவீர பண்டிதர்,

இறப்பு நிகழ்வெதிர்வாங் காலங்கள் ஏற்றும்

குறிப்பும் உருபேற்றல் கூடாத் - திறத்தவுமாய்

முற்றெச்ச மென்றிரண்டாய் மூவகைத்தாய் மூன்றிடத்து

நிற்கும் வினைச்சொற்கள் நேர்ந்து (நேமி.63) என்கின்றார்.

இச்சூத்திரத்தின்படி குணவீர பண்டிதர் பின்வரும் கருத்துகளைப் பெற வைக்கின்றார். அவையாவன:

1. வினைச்சொல் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எனும் மூவகைக் காலங்களைக் காட்டும்.

2. வேற்றுமையுருபுகளை ஏற்கா.

3. இது முற்று, எச்சம் என இரண்டாக நிற்கும்

4. உயர்திணை வினை, அஃறிணை வினை, விரவுவினை என மூவகைத்தாயும் தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற மூவகை இடத்தும் நடக்கும்.

வினைச்சொற் பாகுபாடு

                குணவீர பண்டிதர் வினைச்சொற்களை முற்று, எச்சம் என இரண்டாகப் பகுத்துள்ளார் (நேமி.63) என்பது முன்னரே சொல்லப்பட்டுள்ளது.

வினைமுற்று

                  பொருள் முற்றுப் பெற்று நிற்கும் வினைச்சொல்லை முற்று என்று இலக்கண மரபில் வழங்குவர் (மோ.இசரயேல்1976:14). குணவீர பண்டிதர் வினைமுற்று என்பதை முற்று என்ற பெயரால் அழைக்கின்றார். தமிழ் வினைமுற்றுகளை இடவேறுபாடு (Person distinction) உணர்த்துவதன் அடிப்படையில் இடவேறுபாடு உணர்த்தும் வினைமுற்றுகள் (Personal Finitive Verbs), இடவேறுபாடு உணர்த்தாத வினைமுற்றுகள் (Impersonal Finite Verbs) என இரண்டாகப் பகுக்கலாம். ஆனால், குணவீர பண்டிதர் தன்மை வினைமுற்றை உளப்பாட்டுத் தன்மை வினைமுற்று என்றும் தனித்தன்மை வினைமுற்று என்றும் இரண்டாகப் பிரிக்கின்றார். மேலும், படர்க்கை வினைமுற்றை உயர்திணைப் படா்க்கை வினைமுற்று எனவும் அஃறிணைப் படர்க்கை வினைமுற்று எனவும் பகுக்கின்றார். தொடர்ந்து முன்னிலை வினைமுற்றை முன்னிலை ஒருமை, முன்னிலைப் பன்மை என இரண்டாகப் பிரித்து வகைப்படுத்தியுள்ளார்.

தன்மை வினைமுற்று

குணவீர பண்டிதர் வினை மரபில்,

அம்ஆம் எம்ஏமுங் கடதறமேல் ஆங்கணைந்த

உம்மும் உளப்பாட்டுத் தன்மையாம் - தம்மொடு

புல்லுங் குடுதுறுவும் என்ஏனும் பொற்றொடியாய்

அல்லும் தனித்தன்மை யாம் (நேமி.64) எனத் தன்மை வினைமுற்று ஈறுகளைப் பட்டியலிட்டுள்ளார்.

 

 

 

தன்மை வினைமுற்று (வினையடி + கா.கா.உ. + தன்மை வினைமுற்று விகுதி)

 

 

 

               உளப்பாட்டுத் தன்மை                                                                                                 தனித்தன்மை

                       (பன்மை)                                                                                                                       (ஒருமை)

உளப்பாட்டுத் தன்மைப் பன்மை வினைமுற்று

                 பேசுபவர் முன்னிலையாரையும் தம்முடன் சேர்த்துக் கொண்டு பேசுவது உளப்பாட்டுத் தன்மைப் பன்மை வினைமுற்று ஆகும். இதன் விகுதிகளாகக் குணவீர பண்டிதர் அம், ஆம், எம், ஏம், கும், டும், தும், றும் (நேமி.64) உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டுள்ளார். அம் - உண்டனம், ஆம் - உண்பாம், எம் - உண்டனெம், ஏம் - உண்டேம், கும் - உண்கும், டும் - உண்டும், தும் - வருதும், றும் - சேறும். இச்சான்றுகளில் உளப்பாட்டுத் தன்மைப் பன்மையைக் காணலாம்.

தனித்தன்மை வினைமுற்று (தன்மை ஒருமை வினைமுற்று)

                  தன்மை ஒருமை வினைமுற்றையே நேமிநாதம் தனித்தன்மை என்ற பெயரில் அழைக்கின்றது. இது தன் வினைக்குரிய விகுதிகளைக் கொண்டு காலங்காட்டும் இடைநிலைகளுடன் முற்றுப் பெற்று வரும் வினைச்சொல்லாகும். இதன் ஈறுகளாவன : கு, டு, து, று, என், ஏன், அல் (நேமி.64). கு - உரைக்கு, டு - உண்டு, து - வருது, று - சேறு, என் - உண்டனென், ஏன் - கிடந்தேன், சென்றேன், புலப்பேன், உள்ளினேன், அல் - அறிவல், செய்வல், உண்ணா நிற்பல், உண்பல், தின்பல்.

முன்னிலை வினைமுற்று

குணவீர பண்டிதர் வினைமரபில், 

மின்னும் இர்ஈரும் விளம்பும் இருதிணையின்

முன்னிலைப் பன்மைக்கா மொய்குழலாய் - சொன்ன

ஒருமைக்கண் முன்னிலையாம் இஐஆய் உண்சேர்

பொருஎன் பனவும் புகல் (நேமி.67)

என்ற சூத்திரத்தில் முன்னிலை வினைமுற்று ஈறுகளைப் பகர்கின்றார். இவ்வீறுகளைப் பன்மைக்குரியன, ஒருமைக்குரியன என இரண்டாகப் பிரிப்பர்.

மின் - உண்மின், இர் - உண்டனிர், ஈர் - உண்டீர் - முன்னிலைப் பன்மை வினைமுற்று

இ - உண்டி, தின்றி, ஐ - உண்டனை, உண்குவை, ஆய் - உண்டாய் - முன்னிலை ஒருமை வினைமுற்று

உண், சேர், பொரு - முன்னிலை ஒருமை வினைமுற்று

படர்க்கை வினைமுற்று

ஆங்குரைத்த அன்ஆனும் அள்ஆளும் அர்ஆர்ப

பாங்குடைய முப்பாற் படர்க்கையாம் (நேமி.65)

சொன்ன அஆவத் துடுறுவும் அஃறிணையின்

பன்மை ஒருமைப் படர்க்கையாம் (நேமி.66)

உள்ளிட்ட சூத்திரங்கள் படர்க்கை வினைமுற்றுக்குரிய ஈறுகளை வரையறுத்துத் தருகின்றன.

உயர்திணை ஆண்பால் வினைமுற்று : அன் - உண்டனன், ஆன் - உண்டான்

உயர்திணை பெண்பால் வினைமுற்று : அள் - உண்டனள், ஆள் - உண்டாள்

உயர்திணைப் பலர்பால் வினைமுற்று : அர் - உண்டனர், ஆர் - உண்டார், ப - உண்ப, தின்ப.

அஃறிணைப் பன்மை வினைமுற்று : அ - உண்டன, ஆ - உண்ணா

அஃறிணை ஒருமை வினைமுற்று : து - உண்டது, டு - குண்டுகட்டு, று - கூயிற்று

வியங்கோள் வினைமுற்று

                 தமிழில் வழங்கும் வினை வகைகளுள் ஒன்று வியங்கோள் வினைமுற்று. குணவீர பண்டிதர் வினை மரபில் வியங்கோளும் (நேமி.69) என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், அதற்குரிய உருபுகளைத் தரவில்லை. இவ்வினைமுற்று மூன்றிடத்தும் இருதிணை ஐம்பாலினும் வரப்பெறும். விரவு வினையுள் ஒன்றாக இதனைக் குறிப்பிட்டுள்ளார் குணவீர பண்டிதர். சான்றுகள்: யாம் செல்க, நீ செல்க, அவன் செல்க.

எச்சம்

               எச்சம் என்பது ஒரு சொல் மற்றொன்றை அவாவி நிற்பது அல்லது ஒன்றைக் கூற இன்னொரு பொருளும் எஞ்சி நிற்பது ஆகும். இங்குச் சொல்நிலையில் அமையும் முதல் விளக்கத்தையே எடுத்துக் கொள்ளலாம். தமிழ் இலக்கணிகள் எச்ச வினைகளை வாய்பாட்டு (Pattern) முறையால் குறித்துள்ளனர். குணவீர பண்டிதர் உருபனியல் நிலையில் எச்சங்களை வினையெச்சம், பெயரெச்சம் என இரண்டாகப் பகுக்கின்றார். 

வினையெச்சம்

                வினை எஞ்ச நிற்கும் வினைச்சொல் வினையெச்சமாகும். இது தொழிலும் காலமும் காட்டி நிற்கும். திணை, பால், எண், இடம் ஆகிய இலக்கணக் கூறுகளை உணர்த்தாது. சான்று: வந்து சென்றான் - இதில் வந்து என்பது வினையெச்சமாகும். இது -ந்த்- இறந்த காலம், வருதல் - தொழில் உணர்த்துகின்றது. இவ்வினையெச்சத்தைக் காட்டும் வாய்பாடுகளை நேமிநாதம்,

செய்து செயச்செய்யாச் செய்யிய செய்தெனச்

செய்பு செயின்செயற் கென்பனவும் - மொய்குழலாய்

பின்முன்பான் பாக்கும் பிறவும் வினையெச்சச்

சொன்முன் வகுத்தோர் துணிவு (நேமி.68) என்கின்றது.

இவ்வாய்பாடுகளை இரண்டாகப் பிரிக்கலாம். முதல் வகையில், வினையடி + காலங்காட்டும் இடைநிலை + வினையெச்ச விகுதி என்ற அமைப்பு. இரண்டாம் வகையில் பின், முன், பான், பாக்கு ஆகிய உருபுகள் தனியாக வினையெச்சப் பொருளை உணர்த்தவில்லை. இவ்வுருபுகளுள் பின், முன் என்பன இறந்த காலத்தையும் இறப்பல்லாக் காலத்தையும் உணர்த்தும் பெயரெச்சங்களோடு வருகின்றன என்பர் (ச.சுபாஷ் சந்திரபோஸ், 2018:111).

முதல் வகை

செய்து

              இது இறந்த கால இடைநிலையைப் பெற்று இறந்த காலத்தை உணர்த்தும் தன்மையுடையது. இதில் வரும் உகரம் ஓர் ஒலித்துணை உயிர் மட்டுமே என்பார் ச.சுபாஷ் சந்திரபோஸ் (ச.சுபாஷ் சந்திரபோஸ், 2018:74).

 சான்று: உழுது வந்தான் - உழுது - செய்து வாய்பாடு.

செய

            இது நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் உரியது.

சான்று: மழை பெய்ய பயிர் வளர்கின்றது - நிகழ்காலம் காட்டுதல்

உண்ணச் செல்வான் - எதிர்காலம் காட்டுதல்

 

 

செய்யா

                  செய்யாது என்பது ஈறு கெட்டு செய்யா என்னும் எதிர்மறை வினையெச்சமாக வருகின்றது. இது அருகிய வழக்காக உள்ளது. சான்றுகள்: வாரா தந்தான், உண்ணா வந்தான், வாரா தந்தான்.

செய்யிய / செய்யியர்

                  செய்யியர் என்பதன் ஈற்றுக் குறைவு வடிவமே செய்யிய என்பது. இது பற்றித் தெய்வச்சிலையார், “செய்யிய என்பது வாய்பாடு வேற்றுமை யுடைத்தாதலான் பொருள் நோக்காது சொல் நோக்கிக் கூறப்பட்டது” (தொல்.சொல்.தெய்.221) என்கின்றார். ச.சுபாஷ் சந்திரபோஸ் இவ்வாய்பாடு பற்றிக் கூறுகையில், “செய்யியர் செய்யிய என்ற இரண்டு வினையெச்ச வடிவங்களில் செய்யியர் வடிவமே மிகவும் தொன்மையான வடிவம். ஈற்று ரகர ஒற்று இழந்ததால் தோன்றிய ஒரு வட்டார வழக்கு வடிவமே செய்யிய அமைப்பு வினையெச்சம்” (ச.சுபாஷ் சந்திரபோஸ், 2018:92) என்கின்றார். இவரது இக்கூற்று ஏற்றுக் கொள்ளக் கூடியதே. சான்றுகள்: காணிய சென்றான், காணிய கொண்டான், காணிய போயினான். செய்யியர் வடிவத்தைக் குணவீர பண்டிதர் குறிப்பிடவில்லை. இவரது காலத்தில் அவ்வடிவம் வழக்கிழந்திருக்கலாம்.

செய்தென

                  பெரும்பாலான மொழியியல் அறிஞர்கள் இவ்வமைப்பு வினையெச்சத்தைச் செய்து + என இணைந்த வடிவம் ஆகும். இவை இரண்டும் இணைந்தே ஒரு வகையான வினையெச்சப் பொருளைத் தருகின்றன. இவ்வாய்பாடு பற்றித் தி.நடராசன் கூறுகையில், “செய்து என்னும் வினையெச்சத்தோடு என என்னும் எச்சம் இணைந்து, இரண்டும் சேர்ந்து ஒன்றாய் நின்று வினையெச்சமாகச் செயல்படுகின்றது எனலாம்” என்கின்றார். இவரது இக்கூற்று முன்னர் கூறிய கருத்தை உறுதி செய்கின்றது. மழை பெய்தென அறம் பெற்றது என்னும் சான்றில் வினைமுதல் மழை. இது வினைமுதல் கொண்டு முடிந்தது. மழை பெய்தென உலகம் ஆர்த்தது என்னும் சான்றில் வரும் எச்சம் பிற வினை கொண்டு முடிந்துள்ளது.

செய்பு

                 இவ்வாய்பாடு அகப்புணர்ச்சியில் வரும்போது வினையடியில் எவ்வித மாற்றமும் இல்லாமல் வருகின்றது. எல்லா வினையடிகளோடும் ப் + உ = பு இயல்பாகவே சேர்கின்றது.

சான்றுகள்: உண்குபு சென்றான், உண்குபு வந்தான், கையிறுபு வீழ்ந்தது, கையிறுபு வீழ்ந்தான்.

செயின்

                இவ்வினையெச்ச வாய்பாடு நிபந்தனை பொருட்டுப் பயின்று வருகின்றது. மேலும், இறப்பல்லாக் காலத்தை உணர்த்துகின்றது. சான்று: மழை பெய்யின் குளம் நிறையும். இச்சான்றில் வரும் பெய்யின் என்பது நிபந்தனையின் காரணமாகப் பயின்று வந்துள்ளது.

செயற்கு

                 இதன் அமைப்பைத் தொழிற்பெயர் + வினையெச்ச ஈறு என்று பிரிக்கலாம். இவ்வாய்பாடு பற்றிய சேனாவரையர் விளக்கம் ஈண்டு நினைவுகூரத்தக்கது. “செயற்கு என்னும் வினையெச்சம் உருபேற்று நின்ற தொழிற்பெயரோடு ஒப்புமை உடைத்தாயினும் உருபும் பெயரும் ஒன்றாகாது பகுக்கப் பிளவுபட்டிசையாது ஒன்று பட்டிசைத்தலான் அதனின் வேறாயினாற்போல” (தொல்.சொல்.சேனா.40) என்கின்றார். சான்று: உணற்கு வந்தான். இது உண்பதற்கு என்பதன் மாற்று வடிவமாகும்.

இரண்டாம் வகை

பின் - நீ இவ்வாறு கூறியபின் சென்றான்.

முன் - மருந்து தின்பதற்குமுன் நோய் தீர்ந்தது.

பான் - செய் + ப் + ஆன் - உண்பான் வந்தான் (உண்பதற்கு வந்தான் - இறப்பல்லாக் காலம்)

பாக்கு - செய் + ப் + ஆன் + கு - உண்பாக்கு வந்தான், செய்பாக்கறிந்து, வேபாக்கு, தருபாக்கு

எச்சங்கள் அடுக்கி வருதல்

               தமிழில் வினையெச்சங்கள் பொருள் அடிப்படையிலேயே அடுக்கி வருகின்றன. பெயரெச்சங்கள் அதிகமாக அடுக்கி வாரா. வினையெச்சங்கள் அடுக்கி வருவதற்குக் கொடுக்கப்படும் விளக்கமே பெயரெச்சங்களுக்கும் கொடுக்கப்படுகின்றன. பெயரெச்சங்கள் அடுக்கி வந்து பெயர் கொண்டு முடிவதற்கும் வினையெச்சங்கள் அடுக்கி வந்து வினை கொண்டு முடிவதற்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. பல செயல்களை உணர்த்தும் பெயரெச்சங்கள் அடுக்கி வரும்போது அச்செயல்கள் எல்லாம் அப்பெயரைச் சார்ந்தே அமையும் (ச.சுபாஷ் சந்திரபோஸ், 2018:92). எச்சங்கள் அடுக்கி வருவது பற்றிக் குணவீர பண்டிதர் குறிப்பிடுகையில், சாற்றும் பெயர்வினை யெச்சங்கள் தாம் அடுக்கித் தோற்றல் (நேமி.70) என்கின்றார். புரைதீரா மன்னா விளமை (நாலடி.11) என்ற நாலடியார் அடியில் பெயரெச்சங்கள் அடுக்கி வருகின்றன. வினையெச்சங்கள் அடுக்கி வருவதற்குப் பின்வரும் குறளைச் சான்று காட்டலாம்.

கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும்

ஒண்டொடி கண்ணே உள (குறள்.1101).

குறிப்பு வினை

                காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் குறிப்பாகக் காட்டும் வினையே குறிப்பு வினையாகும். குணவீர பண்டிதர் வினைக் குறிப்புச் சொற்களாக அன்று, அல்ல, வேறு, இல்லை, உண்டு (நேமி.69) ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளார். 

நீ அன்று

நான் அல்ல

அவர் வேறு

அவை இல்லை

அவன் உண்டு

இச்சான்றுகளிலெல்லாம் காலங் காட்ட முடியாத நிலை இருப்பதைக் காண்கின்றோம். காலமானது குறிப்பாகக் காட்டும் நிலையில் இவற்றைக் குறிப்பு வினை அல்லது வினைக் குறிப்பு என்கின்றோம்.

பெயரெச்சம்

                  ஒரு வினையும் ஒரு பெயரும் சேர்ந்த முற்றுப் பெறாத சொல்லே பெயரெச்சம். அதாவது, ஒரு பெயரைக் கொண்டு முடியும் வினைச்சொல்லாகும். இது காலத்தையும் தொழிலையும் உணர்த்தும் தன்மையுடையது. குணவீர பண்டிதர் பெயரெச்சம் பற்றிக் கூறும்போது, ஆறன் மேல் செல்லும் பெயரெச்சம் (நேமி.69) என்கின்றார். இதற்கு உரையெழுதும் ஆசிரியர், “நிலமும் பொருளும் காலமும் கருவியும் வினைமுதலும் வினையும் என்னும் ஆறிடத்தும் நடக்கும். செய்யும், செய்த என்னும் பெயரெச்சம் இரண்டும்” (ப.122) என்கின்றார். இதனை விரவுவினையில் ஒன்றாகவே சேர்த்துள்ளார். பொதுவாக, மொழியியலார் தெரிநிலைப் பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம், எதிர்மறைப் பெயரெச்சம், -ஆன விகுதி பெற்றவை (கு.பரமசிவம், 2011:184) ஆகிய நான்கினைக் குறிப்பிட்டுள்ளனர்.

தெரிநிலைப் பெயரெச்சம்

செய்யும் - வாய்பாடு

யான் உண்ணும்

அவன் உண்ணும்

நான் எறியும் கல்

நான் உண்ணும் உணவு

செய்த - வாய்பாடு

நான் எறிந்த கல்

நான் உண்ட இறைச்சி

எதிர்மறைப் பெயரெச்சம்

இது எதிர்மறைப் பொருளை உணர்த்தி நிற்கும் பெயரெச்சமாகும். இப்பெயரெச்சம் பற்றி நேமிநாதம், .......... எதிர் மறுத்துச் சொன்னாலும்..... (நேமி.70) என்கின்றது. இது வேர்ச்சொல் + ஆ + த் + அ என்னும் அமைப்பு உடையது.

உண்ணாத சாத்தன்

உறங்காத குழந்தை

இச்சான்றுகளில் எல்லாம் பெயர்ச்சொல்லுக்கு முன்னேயே பெயரெச்சங்கள் வந்துள்ளன. ஐம்பாலுக்கும் மூவிடத்திற்கும் பொதுவானதாகவே அமைந்துள்ளன. இவ்வெச்சங்கள் வினையடிகளில் இருந்து தோன்றிக் குறிப்பிட்ட ஓர் அமைப்பைக் கொண்டு பெயரை அவாவி நிற்கும் இலக்கணக் கூறாக அமைந்துள்ளன எனலாம்.

சொல்லடுக்கு

              இசைநிறை, விரைவு, அசைநிலை, இரட்டைக்கிளவி ஆகியவை அடுக்கி வருமிடங்களைக் குணவீர பண்டிதர் பகர்கின்றார். இதனை,

இசைநிறை நான்கு வரம்பாம் விரைசொல்

விசையிலா மூன்று வரம்பா - மசைநிலை

ஆய்ந்த வொருசொல் லடுக்கிரண்டாந் தாம் பிரியா

ஏந்திரட்டைச் சொற்கள் இரட்டு (நேமி.74) என்ற நூற்பாவில் காணலாம்.

சான்றுகள்:

பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ - இசைநிறை - ஒரு சொல் நான்கு முறை அடுக்குதல்.

பாம்பு பாம்பு பாம்பு - விரைவு - ஒரு சொல் மூன்று முறை அடுக்குதல்.

கண்டீரே கண்டீரே - அசைநிலை - ஒரு சொல் இரண்டு முறை அடுக்குதல்.

சரசரவென்று - இரட்டைச்சொல் - பிரித்தால் பொருள் தரா.

தொகுப்புரை

                அமைப்பு மொழியியலார் மொழியின் அமைப்பை ஒலியியல், ஒலியனியல், உருபனியல், தொடரியல் ஆகிய நான்கு நிலைகளில் ஆராய்கின்றனர். இவற்றுள் உருபனியல் சொல்லியல் பற்றி ஆய்கின்றது. பொருள் தரும் மிகச் சிறிய ஒலிக்கூறான உருபனைப் பற்றிய ஆராய்ச்சித் தமிழ் இலக்கணிகளிடையே காலங்காலமாக வழங்கி வந்துள்ளன. மொழியியல் வளராத காலச்சூழலில் சொல்லிலக்கணங்களை ஆராய்ந்துள்ள திறம் போற்றற்குரியது. மொழியின் கட்டமைப்பை மட்டும் இலக்கணிகள் விளக்காமல் அவற்றில் உள்ள நுட்பமான கூறுகளையும் வெளிப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் நன்னூல் காலத்திற்கு முன் தோன்றிய நேமிநாதம் தம் காலத்திற்கு முன்பு தோன்றி இலக்கண நூல்களைப் பின்பற்றி எழுதப்பட்டதாயினும் தம் காலத்திற்கேற்ப மாற்றங்களைச் செய்துள்ளது எனலாம். அஃறிணையைக் குணவீர பண்டிதர் உயிருள்ளனவும் இல்லனவும் என்று இரண்டாகப் பிரித்து விளக்கியுள்ளார். இஃது தொல்காப்பியரால் குறிப்பிடப்படவில்லை. தன்மை ஒருமையைத் தனித்தன்மை என்றும் தன்மைப் பன்மையை உளப்பாட்டுத் தன்மை என்றும் பாகுபடுத்தியுள்ளார். இப்பகுப்புத் தொல்காப்பியத்தில் இல்லாதது.

                    மொழியியலார் கருத்தாடல் நோக்கில் தன்மை என்பது பேசுபவனைக் குறிக்கும் என்பர். எனவே, குணவீர பண்டிதர் தன்மையை உயர்திணை வகையில் சேர்த்துள்ளார். திணை - பால் காட்டும் ஒட்டுகளை க் குணவீர பண்டிதர் மொழியாக்க மரபிலும் வினை மரபிலும் குறிப்பிட்டுள்ளார். கால ஒட்டுகளையோ எதிர்மறை ஒட்டுகளையே நேமிநாதம் குறிப்பிடவில்லை. குணவீர பண்டிதர் -ஆன், -ஒடு என்ற மூன்றாம் வேற்றுமைப் பொருளை உணர்த்துகின்றன என்பர். -கள் ஒட்டு பலர் பால், பலவின் பால் என்ற இரண்டு பாலுக்கும் பொது என்று குறிப்பிட்டுள்ளார். - பாக்கு என்ற புதிய வினையெச்ச வடிவத்தை நேமிநாதம் சுட்டக் காணலாம். -அல்ல என்பது ஐம்பால் மூவிடத்துக்கும் வரும் என்றும் ஓகார இடைச்சொல் எண் பொருளிலும் வரும் என்றும் கூறியுள்ளார் குணவீர பண்டிதர். உருபன்களைக் கண்டறிய நைடா குறிப்பிடும் விதிகளும் உருபன்களின் வகைகளான கட்டுருபன், கட்டிலா உருபன், தொடர் உருபன், தொடரா உருபன், கட்டாய உருபன், இரட்டைக்கிளவிகள், வேர் உருபன்கள், வேரல்லா உருபன்கள் முதலியன நேமிநாதத்தில் பொருந்தி வரும் தன்மையும் ஆராயப்பட்டுக் குணவீர பண்டிதரின் உருபனியல் சிந்தனைகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன.

                   தமிழ்மொழி பின்னொட்டு மொழி என்பதால் குணவீர பண்டிதர் கூறும் ஐம்பால் ஈறுகள், பெயரீறுகள், வினைமுற்று ஈறுகள், இடைச்சொற்கள் ஆகியவை பின்னொட்டில் அடங்குகின்றன. மொழியியலார் கூறும் இலக்கணப் பிரிவுகளான பெயரடை, வினையடை, இடைச்சொல், உரிச்சொல் (கட்டு வடிவங்கள்) ஆகியவை நேமிநாதத்தில் பயின்று வந்துள்ளன. சொல் வகைப்பாட்டிற்கு உதவக் கூடிய திணை - பால் - எண் -இடம், வேற்றுமை, காலம் ஆகிய கூறுகளும் பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகிய கட்டிலா வடிவங்களும் குணவீர பண்டிதரால் விளக்கப்பட்டுள்ளன.

 

உசாத்துணை நூல்கள்

1.        இசரயேல், மோ. இலக்கண ஆய்வு - வினைச்சொல், மதுரை பப்ளிஷிங் ஹவுஸ், மதுரை, 1976 (முதல் பதிப்பு).

2.        கந்தசாமியார் & தேவநேயப் பாவாணர், ஞா. (கு.உ), தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையருரை, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், லிமிடெட், சென்னை, 2001 (16-ஆம் பதிப்பு).

3.        கீதா, வி. & லலிதாராஜா, இரா. மொழியறிவியல், மொழியியல் உயராய்வு மையம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 2007 (முதல் பதிப்பு).

4.        கோவிந்தராச முதலியார், கா.ர. நேமிநாதம், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிட்., சென்னை, 2012.

5.        சக்திவேல், சு & இராஜேந்திரன், ச. சொற்கள் (வாழ்வும் வரலாறும்), மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1994 (முதல் பதிப்பு).

6.        சங்கரநாராயணன், ந. தற்காலத் தமிழ் உருபனியல், முனைவர் பட்ட ஆய்வேடு, தமிழ்த்துறை, காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம், காந்தி கிராமம், 2015.

7.        சுபாஷ் சந்திரபோஸ், ச. இலக்கணப் பாகுபாட்டில் மூவிடங்கள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, 2018 (முதல் பதிப்பு).

8.        சுபாஷ் சந்திரபோஸ், ச. வினைப் பாகுபாட்டில் எச்சங்கள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, 2018 (முதல் பதிப்பு).

9.        சுபாஷ் சந்திரபோஸ், ச. மொழியியல் நோக்கில் சொல்லியல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, 2018 (முதல் பதிப்பு).

10.     தெய்வச்சிலையார் (உ.ஆ), தொல்காப்பியம், சொல்லதிகாரம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2010 (மறு அச்சு).

11.     நடராசன், தி. சங்க இலக்கியத்தில் வினையெச்சங்கள் (கட்), வையை, மலர் - 5, (மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, பதிப்பாசிரியா் : முத்துச்சண்முகன், 1980), ப.25.

12.     பரணி ராணி, அ. தமிழில் சொல் வகை, முனைவர் பட்ட ஆய்வேடு, மொழியியல் துறை, தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, 2013.

13.     பரமசிவம், கு. இக்காலத் தமிழ் மரபு, அடையாளம், திருச்சி, 2011 (முதல் பதிப்பு).

14.     புலியூா்க்கேசிகன் (ப.ஆ), திருக்குறள் பரிமேலழகா் உரை, பூம்புகார் பதிப்பகம், சென்னை, 2007 (பத்தாம் பதிப்பு).

15.     மதுரை முதலியார், கு. (தெளிவுரை), நாலடியார், முல்லை நிலையம், சென்னை, 2006 (மறுபதிப்பு).

16.     மீனாட்சி சுந்தரனார், தெ.பொ. உரிச்சொல் (கட்), இலக்கண ஆய்வுக் கட்டுரைகள் - 1, (அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம், பதிப்பாசிரியர்கள்: ச.அகத்தியலிங்கம் மற்றும் க.பாலசுப்பிரமணியன், 1974), பக்.121 - 138.

17.     முத்துச்சண்முகன், இக்கால மொழியியல், முல்லை நிலையம், சென்னை, 2010 (மறுபதிப்பு).

 

 

No comments:

Post a Comment