Wednesday, 13 September 2023

மயிலை நாதர் உரைநெறி

 

மயிலை நாதர் உரைநெறி

முனைவர் மு.சங்கர், உதவிப்பேராசிரியர், தமிழியல் துறை,

ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி (தன்னாட்சி), சிவகாசி - 626130.

அலைபேசி எண் - 6384632150

மின்னஞ்சல் - sankartamilskcgri@gmail.com

        தொல்காப்பியத்திற்குப் பிறகு தோன்றிய நன்னூல் இன்று செல்வாக்கும் மதிப்பும் பெற்றுத் திகழ்கின்றது. இது சுருக்கமும் செறிவும் நிறைந்த சூத்திரங்களைக் கொண்டது. கி.பி.12-ஆம் நூற்றாண்டில் தோன்றிய நன்னூலுக்குக் காலந்தோறும் பலர் உரையெழுதியுள்ளனர்.  ஒவ்வோர் உரைக்கும் தனிப்பட்ட சிறப்பியல்புகள் உள்ளன. நன்னூலுக்கு முதன் முதலில் தோன்றிய உரை மயிலை நாதர் உரையே ஆகும்.  இவர் பவணந்தியாரின் காலத்தை அடுத்துத் தோன்றியவர். பவணந்தியாரின் கருத்தை ஏற்றே, சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் நோக்கில் இவர் உரை அமைந்துள்ளது. இவ்வுரையாசிரியர் சமணச் சமயத்தைச் சேர்ந்தவராதலின் இவரது உரையில் சமணம் தொடர்பான கருத்துகள் காணக் கிடைக்கின்றன. இவ்வுரை கி.பி.17-ஆம் நூற்றாண்டு வரை சிறப்புப் பெற்று விளங்கியது. இவ்வுரையாசிரியர் சீயகங்கன் காலத்திலோ அல்லது அவனது வழித்தோன்றல்கள் வாழ்ந்த காலத்திலோ வாழ்ந்திருக்கலாம் என்பர். பவணந்தியார் காலத்திற்கேற்ப மாற்றங்களைத் தமது நூலில் செய்துள்ளாரெனின், அதனை நாடறியச் செய்த பெருமை மயிலை நாதரையே சாரும். பழமைக்கும் புதுமைக்கு ஒரு புதிய பாலத்தைச் சமைத்துள்ளார் மயிலை நாதர் எனலாம். இத்தகைய உரையாசிரியரின் பணி பாராட்டற்குரியது.  அவரது உரைநெறியைக் காண்பதாக இக்கட்டுரை அமைகின்றது.

உரை இயல்பு

            நன்னூலுக்கு மயிலை நாதர் செய்த உரை சுருக்கமும் தெளிவும் உடையது. இவரது உரையியல்பு பற்றி மு.வை.அரவிந்தன் குறிப்பிடும்போது, “ஆழமான நீா்நிலையில் அமைதியாகச் செல்லும் படகு போன்று இவருடைய உரை நூல் முழுதும் அமைந்துள்ளது” (மு.வை.அரவிந்தன், 2008:557) என்கின்றார். இவரது உரை பெரும்பாலும் இளம்பூரணா் உரையைப் பின்பற்றியே செல்கின்றது. வடமொழிக் கருத்துகள் மிகக் குறைவாகவே எடுத்தாளப்பட்டுள்ளன. மயிலை நாதரின் உரையால் பவணந்தி கூறிய சுருக்கமான கருத்துகள் விளக்கம் பெறுகின்றன.

                        துய்த்த றுஞ்ச றொழுத லணிதல்

                   உய்த்த லாதி யுடலுயிர்த் தொழிற்குணம் (நன்.452)

இச்சூத்திரத்திற்குப் பின்வருமாறு உரை விளக்கம் தருகின்றார் மயிலை நாதர்.

            “மெய் வாய் மூக்குக் கண் செவி யென்னும் ஐம்பொறிகளானும் ஊறு சுவை நாற்றம் ஒளி ஒலியென்னும் ஐம்புலன்களையும் நுகர்தலும் உறங்குதலும் பிறரைத் தொழுதலும் வேண்டினவற்றை அணிதலும் மடைத்தொழில், உழவு, வாணிகம், கல்வி, எழுத்துச் சிற்பமென்னும் ஆறுதொழிலும் களையுமுயறலும்  இவை போல்வன பிறவும் உடம்பொடு கூடிய உயிர்த் தொழிற் பண்பாம் என்றவாறு” என்று விளக்கிப் புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், திருக்குறள் உள்ளிட்ட நூல்களிலிருந்து மேற்கோள் காட்டித் தமது உரை இயல்பை வெளிக்காட்டுகின்றார் மயிலை நாதர்.

            அளவைப் பெயர்களாகப் பின்வருவனவற்றை மயிலை நாதர் காட்டுகின்றார். கழஞ்சு, உழக்கு, ஆழாக்கு, கோல் (நன்.424). இதனை, “ஒரு கழஞ்சும் இரு கழஞ்சும் உழக்கும் ஆழாக்கும் ஒரு கோலும் அரைக்கோலு மென்பன அளவை” எனவரும் அடிகள் உறுதி செய்யும்.

இயல் விளக்கம் தருதல்

            மயிலை நாதர் இயலை ஓத்து என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார். அதிகாரத்தின் ஒவ்வோர் இயலின் தொடக்கத்திலும் இவ்வோத்து என்னுதலியதோ வெனின் என்றும் இவ்வோத்து என்ன பெயர்த்தோ வெனின் என்றும் இவ்வோத்து என்னுதலிற்றோ வெனின் என்றும் வினாக்கள் எழுப்பி விளக்கம் தருகின்றார். உருபு புணரியலில் முதல் சூத்திர உரையில், “இவ்வோத்து என்னுதலியதோ வெனின் ஓத்து நுதலியதூஉம் ஓத்தினது பெயர் உரைப்பவே விளங்கும், ஆயின், இவ்வோத்து என்ன பெயர்த்தோ வெனின், உருபுகள் பதத்தொடு புணருமாறு உணா்த்திற் றாகலான், உருபு புணரியலென்னும் பெயா்த்து” (நன்.239) என்றும் வினையியலின் முதல் சூத்திர உரையில், “இவ்வோத்து என்னுதலிற்றோ வெனின், ஓத்து நுதலியதூஉம் ஓத்தினது பெயருரைப்பவே விளங்கும். ஆயின், இவ்வோத்து என்ன பெயா்த்தோ வெனின், வினைச்சொற்களது இயல்புணர்த்திற்றாதலான், வினையியலென்னும் பெயா்த்து” (நன்.319) என்றும் வினா எழுப்பி ஒவ்வோர் இயலுக்கான பெயர்க்காரணத்தைக் கூறுகின்றார் மயிலை நாதர்.

இயல் இயைபு காட்டல்

            முன்னியலோடு தொடர்புபடுத்திக் கூறுவது இயல் இயைபு ஆகும். முன் உள்ள இயலோடும் பின்வரும் இயலோடும் இயைபுபடுத்திப் பார்க்கின்றார் மயிலை நாதர். முன்னியலோடு தொடர்புபடுத்திப் பார்ப்பதே பெரும்பான்மை. ஏனையவை சிறுபான்மை. இடைச்சொல்லியலில், “...........மேலோத்தினோடு இதற்கு இயைபு என்னையோ வெனின், ஆதியில் நால்வகைச் சொற்களும் உணர்த்துவா னெடுத்துக் கொண்டார், அவற்றுள், இரண்டு உணா்த்தி அவற்றின் பின் நான்கிற்கும் பொதுவான அதனைச் சிங்க நோக்கமாக மேல் வருவனவற்றையும் தழுவி வைத்தார். அதனால், மேலதனோடு இயைபுடைத் தென்க” (நன்.419) என்று மொழிந்துள்ளார். மேலும், உரிச்சொல்லியலில், .......... மேலோத்தினோடு இதற்கு இயைபு என்னையோ வெனின், நால்வகைச் சொல்லிற் பின்னின்றது உரிச்சொல் லாதலின் அதனோடு இயைபுடைத் தென்க” (நன்.441) என்கின்றார். இங்ஙனம் இயல் இயைபானது “இயைபு” என்று குறிப்பிட்டும் வினாவியும் செல்லும் இயல்பானது மயிலை நாதர் உரையில் காணநேர்கின்றது. இயல் இயைபினை இயல் பெயருக்கான காரணத்தைக் கூறி விளக்கியதும் ஈண்டு சிந்தித்தற்குரியது.

சூத்திர இயைபு காட்டல்

            சூத்திரத்தின் பொருளை விளக்குவதற்கு மயிலை நாதா் சூத்திர இயைபைக் காட்டியுள்ளார். நன்னூல் - 322 ஆவது சூத்திரத்திற்கு உரை எழுதுகையில், “.............. அஃதே அதுவும் போனவோத்தினுள், படா்க்கை வினைமுற்று நாமங் குறிப்பின் .......... எனச் சொன்னாரென்க” என்று குறிப்பிட்டுள்ளார்.            

 

 

வினா விடை முறை

            சூத்திர விளக்கத்தில் வினா எழுப்பி விடை கூறும் பாங்கு முக்கிய இடம் வகிக்கின்றது. மாணாகக்கா்களுக்கு ஏற்படும் ஐயங்களைக் களைவதற்காக உரையாசிரியர்கள் இம்முறையைக் கையாண்டனர் எனலாம். ஐயம் எற்படும் இடத்தைக் கண்டறிந்து, வினா எழுப்பி விடை கூறுகின்றார் மயிலை நாதர். இம்முறையைச் சிறுபான்மையே கையாள்கின்றார். வினையியலின் முதல் சூத்திர உரையில், “............ இதனுள், இத் தலைச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், பொது வகையான் வினைச்சொல்லாவது இன்னதென்பது உணா்த்துதல் நுதலிற்று” (நன்.319) என்றும் உரிச்சொல்லியலின் முதல் சூத்திர உரையில், “இவ்வொத்தினுள் இத்தலைச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், உரிச்சொற்களது பொதுவியல் உணா்த்துதல் நுதலிற்று” (நன்.441) என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சூத்திர உரை அமைப்பு

            சூத்திரம் நுவல்வது, அதன் பொருள், சான்று என்றவாறு சூத்திர உரை அமைப்பு காணப்பெறுகின்றது. தில் எனும் இடைச்சொல் பற்றிய சூத்திரத்திற்குப் பின்வருமாறு உரையெழுதியுள்ளார் மயிலை நாதர்.

            “தில்லென்னும் இடைச்சொல்லின் இயல்பு உணா்த்துதல் நுதலிற்று. இம்மூன்று பொருட்கண்ணும் வரும் தில்லென்னு மிடைச்சொல் என்றவாறு. வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி யரிவையைப் பெறுகதி லம்ம யானே (குறுந்.14). பெறுவேனாகவென இது விழைவின்கண் வந்தது....................” (நன்.430)

மேற்கோள் காட்டல்

            தமிழ் இலக்கண உரை மரபில் உதாரணமே முக்கிய இடத்தை வகிக்கின்றது. இவ்வுதாரணம் இலக்கணக் கலைச்சொல்லின் பொருளைத் தெளிவாக உணர்த்தவல்லது. இது ஒரு நெறியாகவே தொடர்ந்து வந்துள்ளது எனலாம். மயிலை நாதர் அகத்தியம், தொல்காப்பியம், நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை, பரிபாடல், புறநானூறு, பதிற்றுப்பத்து, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பட்டினப் பாலை, முத்தொள்ளாயிரம், திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு, நான்மணிக்கடிகை, களவழி நாற்பது, திரிகடுகம், ஐந்திணை ஐம்பது, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, சூளாமணி, புறப்பொருள் வெண்பா மாலை, யாப்பருங்கல விருத்தி உரை முதலிய நூல்களில் இருந்து மேற்கோள் காட்டித் தமது புலமையை நிலைநாட்டியுள்ளார்.

தயக்கம் அல்லது ஒப்படைத்தல் 

            பவணந்தியாரின் கருத்தை நன்கு புரிந்து கொள்வதற்கு இவர் முயன்றுள்ளார். கால மாற்றத்திற்கேற்பத் தோன்றும் மாற்றங்களைக் கருத்திற் கொண்டே உரையெழுதுகின்றார். நன்னூலுக்கு முதன்முதலில் உரையெழுதுவதால் இவருக்குத் தயக்கமும் ஐயமும் ஏற்பட்டுள்ளது போலும். எனவேதான், விளங்கினவாறு காண்க, அறிந்து கொள்க, வந்தவாறு காண்க, மற்று வருவனவும் கொள்க, ஏனைய வந்துழிக் காண்க, பிறவும் வந்த வழிக் காண்க, இவ்வாறே எடுத்தோதாத சாரியைகளெல்லாம் எடுத்து முடிக்க (நன்.252) என்று சில இடங்களில் உரை எழுதிச் செல்கின்றார்.

மூல நூலாசிரியரை மதித்தல்

            மூல நூலாசிரியரை மதிக்கும் குணம் உரையாசிரியரான மயிலை நாதருக்கு இருந்துள்ளது. ஆகவேதான், “ஓம் விகுதியையும் வழக்குண்மையிற் கொண்டாரென்க” (நன்.331) என்றும் “இது புணா்ச்சி விதியன்மையின் ஈண்டே வைத்தா ரென்க” (நன்.335) என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், எழுத்தியல் பகுதியில் வரும் குற்றுகரம் பற்றி அவர் கூறும் கருத்து மூல நூலாசிரியரை மதிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. “குற்றுகரமும் உயிராயடங்கு மெனினும் புணர்ச்சி முதலான வேறுபாடுண்மை நோக்கி வேறெடுத் தோதினா ரென்க” (நன்.106).

மறுத்துரைத்தல்

          முன்னோர் கூறியவற்றைச் சில விடத்து மறுத்தும் மொழிந்துள்ளார் மயிலை நாதர். “கல்லென் கௌவை, ஒல்லென் பௌவம் என்பன இடையே குறைந்தவை யென்பாருமுளர். அவை கௌவை, பௌவமென முதலிலே குறைந்த மொழிகள் நிலைமொழிகளோடு புணா்ந்தன வென மறுக்க. அந்தௌ, அத்தௌ என்பன கடையிலே குறைந்த வெனின், அவை ஒரு பொருட் சிறப்புடையவாய் நடப்பன வல்லவென மறுக்க” (நன்.94). இவ்விளக்கத்தில் ஐகாரக் குறுக்கம் பற்றிப் பேசியுள்ளார்.

வடமொழி அறிவு

            இலக்கணக் கல்வியில் முக்கியமானது வடமொழியறிவு. வடமொழிக் கல்வி தமிழகத்தில் பரவலாக இருந்துள்ளதைப் பல்லவர், சோழா்தம் காலநிலைகள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. இந்தக் கல்வி மரபின் தொடர்ச்சி இலக்கணத்திலும் உரை மரபிலும் தொடர்ந்துள்ளதை உரையாசிரியர்களின் உரைமரபுகள் வெளிப்படுத்துவனவாக உள்ளன (பெ.மாதையன், 2014:102). இம்மரபு மயிலை நாதரின் உரையிலும் காணக்கூடியதாக உள்ளது. இவர் வடமொழியை ஆரிய மொழி என்கின்றார். பவணந்தியார் எழுத்தின் வடிவம் பற்றிப் பேசும்போது,

                        தொல்லை வடிவின வெல்லா வெழுத்தும்

                   ஆண்டு எய்தும் எகரம் ஒகர மெய் புள்ளி (நன்.97) என்கின்றார். இச்சூத்திரத்தின் உரையில், “ஆண்டு என்ற மிகையானே, தாது, ஏது என்றற் றொடக்கத்து ஆரிய மொழிகளும்............” என்று வருகின்றது. இஃது மயிலை நாதரின் வடமொழிப் புலமையைப் பறைசாற்றுவதாக உள்ளது.

அழிந்த நூல்களில் இருந்து சான்று காட்டல்

          காலத்தின் கொடூரப் பிடியில் சிக்கிப் பல அரிய நூல்கள் அழிந்துவிட்டன. உரையாசிரியர்கள் தம் காலத்தில் வழங்கிய நூல்களையும் அவற்றின் சில பாடல்களையும் மேற்கோள் காட்டிச் சென்றுள்ளனர். அவற்றில் இருந்து இன்னின்ன நூல்கள் அழிந்து போயின என்பதை நம்மால் ஊகித்து உணர்ந்து கொள்ளமுடியும். மயிலை நாதர் காலத்தில் அகத்தியம், கந்தருவ நூல், அவிநயம் போன்ற நூல்கள் வழக்கில் இருந்துள்ளன. எனவே, அவற்றுள் சில பகுதிகளைத் தமது உரையில் மேற்கோள் காட்டிச் சென்றுள்ளார்.

            “உயிர் பன்னிரண்டு மாத்திரையும் ஒற்றுப் பதினொரு மாத்திரையும் நீளுமென்றார் கந்தருவ நூலுடையார். அவை வந்த வழிக் காண்க.” (நன்.100)

          ஙகரம் மொழிக்கு முதல் வரும் என்ற கருத்துடைய அவிநயனார் சூத்திரத்தை மேற்கோள் காட்டியுள்ளார் மயிலை நாதர்.

                        கசதபங்வ்வே யாதியு மிடையும்

                   டற விடை ணனரழ லளஇடை கடையே

                   ஞநமய வவ்வே மூன்றிட மென்ப

என ஙகரம் ஈரிடத்தும் நிற்கும் என்றார் ஆசிரியா் அவிநயனாரு மெனக் கொள்க. (நன்.101).

            சகரம் மொழிக்கு முதலில் வரும் (நன்.105) என்ற கருத்துடைய மயிலை நாதர் தமது உரையில்,             சரிசமழப்புச் சட்டி சருகு சவடி

                   சளி சகடு சட்டை சவளி - சவி சரடு

                   சந்து சதங்கை சழக்காதி யீரிடத்தும்

                   வந்தனவாற் சம்முதலும் வை

என்று எழுதியுள்ளர்.

இலக்கணப் பொருளைக் காட்டல்

            மயிலை நாதர் சொற்களின் இலக்கணப் பொருளைக் காட்டி உரை எழுதியுள்ளார்.

வினைக்குறிப்பு என்பதற்கு விளக்கம் தரும்பொழுது, “வினையைக் குறிப்பாக உடைமையின் வினைக்குறிப்பு” (நன்.320). என்கின்றார். மேலும் வியங்கோளாவது யாது? என்பதற்கு உரை விளக்கம் செய்கையில், “வியங்கோள் என்பது ஏவல்” (நன்.329) என்று குறிப்பிடுகின்றார். இதனைப் போலவே, ஓம் எனும் உளப்பாட்டுத் தன்மைப் பன்மை விகுதியை நன்னூலார் ஏன் கொண்டார்? என்பதற்கு விடையாக மயிலை நாதர், “ஓம் விகுதியையும் வழக்குண்மையிற் கொண்டாரென்க” (நன்.332) என்று தமது கருத்தை முன்னிறுத்தி ஆசிரியரின் கருத்திற்கு வலுசோ்க்கின்றார்.

சமணச் சமயம் பற்றிய பதிவு

            மயிலை நாதர் சமணச் சமயத்தைச் சேர்ந்தவராதலால் தமது உரையில் சிலவிடத்து அதனைக் குறிப்பிட்டுள்ளார். தன்மை ஒருமை வினைக்குச் சான்று காட்டும்போது மயிலை நாதர், “தாதிவர் தாமரைத் தடமல  ரொதுங்கிய

                       ஆதியை வணங்கி யறைகுவ னெண்ணே”

என்ற செய்யுளைத் தருகின்றார்.  இச்செய்யுள் சமணக் கடவுளைக் குறிப்பிடுகின்றது.

 

பிற ஆசிரியரை மதித்தல்

          மயிலை நாதர் தமக்கு முன்புள்ள ஆசிரியர்களைச் சொல்லுகையில், மெய்ந்நூலார் தொல்காப்பியனார், இளம்பூரண வாசிரியர், அகத்தியனார் என்கின்றார். இது அவரது பண்புநலனைக் காட்டுகின்றது.

            இக்கட்டுரையின் நிறைவாக, நன்னூலுக்கு மயிலை நாதர் எழுதிய உரை எளிமையும் சுருக்கமும் செறிவும் நிறைந்ததாக உள்ளது. எனினும் அவர் சமணத்தைச் சேர்ந்தவா் என்பதால் பின் வந்தோரால் அவரது உரை பின்பற்றப்படாமலேயே போய்விட்டது. இவரது உரைநெறிகள் அனைத்துமே சிறப்பானவை. இயல் இயைபு, வைப்பு முறை, சொற்றொடர் ஆகியவற்றை நிலைப்படுத்துதல், வினா விடை, நூற்பா உரை அமைப்பு ஆகியவை முதன்மை இடம் பெறுகின்றன. இவரது உரை பொழிப்புரையாகவே அமைந்துள்ளது. இன்றியமையாச் சொற்களுக்குப் பொருள் தரும் பாங்கு மயிலை நாதரிடம் உண்டு. சூத்திரங்களை இலக்கிய, இலக்கணங்களைக் கொண்டு விளக்குதல், தொல்காப்பிய, அகத்திய, அவிநயம் ஆகிய நூல்களின் சூத்திரங்களைக் கொண்டு விளக்குதல், நூலாசிரியரின் கருத்தை மதித்தும் எடுத்துக்காட்டுத் தந்தும் விளக்குதல் ஆகிய நெறிகளைப் பின்பற்றியுள்ளார். இவரது உரையினால் நன்னூல் உரை மரபு எனும் ஒரு மரபு உருவாயிற்று எனலாம்.

துணைநூற் பட்டியல்

1.    அரவிந்தன், மு.வை., உரையாசிரியர்கள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2008 (இரண்டாம் பதிப்பு).

2.    கண்ணன், இரா., நன்னூல் உரைவளம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2010 (முதல் பதிப்பு).

3.    மாதையன், பெ., உரையியல், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, 2014 (முதல் பதிப்பு).

*****************

No comments:

Post a Comment