Wednesday, 5 August 2020

தொல்காப்பிய ஆய்வின் வளர்ச்சியும் வரலாறும்

தொல்காப்பிய ஆய்வின் வளர்ச்சியும் வரலாறும்       

    தமிழ்மொழியின் பெருமையையும் உயர்வையும் தமிழில் தோன்றிய நூல்கள் பறைசாற்றுகின்றன. அந்நூல்கள் அனைத்திலும் தலைசிறந்த, தொன்மையான நூலாகத் திகழ்வது தொல்காப்பியம் ஆகும். இது இலக்கண நூலாக மட்டுமின்றி இலக்கிய நூலாகவும் திகழ்கின்றது. இந்நூலைப் பற்றி வரலாற்றைத் தமிழில் எழுதப்பட்டுள்ள இலக்கிய வரலாறு தொடர்பான நூல்களில் கண்டுகொள்ளலாம். இக்கட்டுரை தொல்காப்பிய ஆய்வின் வளர்ச்சியையும் வரலாற்றையும் எடுத்துரைப்பதை நோக்கமாகக் கொண்டது.
    ஆய்வாளருக்குக் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் தொல்காப்பிய ஆய்வின் வளர்ச்சியையும் வரலாற்றையும் 5 ஆகப் பகுத்துக் காணலாம்.
1.    தொல்காப்பியப் பதிப்புகள்
2.    தொல்காப்பிய ஆய்வடங்கல்
3.    தொல்காப்பிய உரைகள் பற்றிய ஆய்வுகள்
4.    தொல்காப்பியமும் கருத்தரங்குகளும்
5.    தொல்காப்பியமும் ஆய்வுகளும்
தொல்காப்பியப் பதிப்புகள்
    க.த.திருநாவுக்கரசு (1972) என்பவர் தொல்காப்பிய நூலடைவு ஒன்றைத் தமிழாய்வு தொகுதி - 1 இல் வெளியிட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து மு.சண்முகம் பிள்ளை (1978) தொல்காப்பியப் பதிப்புகள் என்ற தலைப்பில் தமிழாய்வு தொகுதி - 8 இல் 70 பக்கங்களுக்கு வெளியிட்டுள்ளார். க.ப.அறவாணன் (1975) இல் தொல்காப்பியக் களஞ்சியம் ஒன்றை வெளியிட்டுள்ளார். கோ.கிருட்டிணமூர்த்தி (1990) என்பவர் தொல்காப்பிய ஆய்வின் வரலாறு என்ற நூலில் 59 பக்கங்களுக்குத் தொல்காப்பியப் பதிப்புகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். 1992 இல் ச.வே.சுப்பிரமணியன் தொல்காப்பியப் பதிப்புகள் என்ற தலைப்பில் நூல் ஒன்றை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மூலம் வெளியிட்டுள்ளார். 2008 இல் பா.மதுகேஸ்வரன் என்பவர் தொல்காப்பியப் பதிப்பு வரலாறு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, தமிழ்ப் புலமை மரபில் தொல்காப்பியம் (2014) என்ற நூலில் இரா.வெங்கடேசன் தொல்காப்பியப் பதிப்புகள் நாற்பத்து நான்கினைக் குறிப்பிட்டுள்ளார். 1847 இல் அச்சுருவாக்கம் பெற்ற தொல்காப்பியம் மழைவை மகாலிங்கையரால் முதன்முதலில் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரையோடு முதல் பதிப்பாக வெளிவந்தது. இதைத் தொடர்ந்து 1858 இல் தொல்காப்பிய நன்னூல் எனும் ஒப்பீட்டு நூல் இ.சாமுவேல் பிள்ளையால் வெளியிடப்பட்டது.  இந்நூல் வெளிவந்து 10 ஆண்டுகள் கழித்து 1868 இல் சோடசாவதானம் சுப்பராய செட்டியாரால் தொல்காப்பிய எழுத்ததிகாரம் பதிப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1885 இல் சி.வை.தாமோதரம்பிள்ளை தொல்காப்பியம் பொருளதிகாரத்தை நச்சினார்க்கினியரின் உரையோடு பதிப்பித்தார். 1905 இல் வா.கோபாலசாமி ரகுநாத ராஜாளி தொல்காப்பியப் பாயிர விருத்தியை வெளியிட்டார். அவரைத் தொடர்ந்து ரா.இராகவையங்கார், நமச்சிவாய முதலியார், சிதம்பர புன்னைவனநாத முதலியார், கா.சுப்பிரமணிய பிள்ளை, ச.கந்தசாமியார், தி.வை.சதாசிவப் பண்டாரத்தார், வ.உ.சிதம்பரம் பிள்ளை, பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரியார், எஸ்.கனகசபாபதி பிள்ளை, வே.துரைசாமி ஐயர், சி.கணேசையர், தி.சு.பாலசுந்தரம் பிள்ளை, மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை, ச.சோமசுந்தரபாரதியார், வே.வேங்கடராஜூலு ரெட்டியார், கா.ர.கோவிந்தராச முதலியார், க.வெள்ளைவாரணர்,வ.ஐ.சுப்பிரமணியம், கு.சுந்தரமூர்த்தி, இராம.கோவிந்தசாமி பிள்ளை, புலவர் குழந்தை, அடிகளாசிரியர், தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் முதலானோர் தொல்காப்பியத்தை முழுமையாகவும் பகுதியாகவும் பதிப்பித்துள்ளனர். அவர்களின் பதிப்புகளில் இடம்பெறும் பதிப்புரைகள் சிறந்த ஆய்வுரைகளாக அமைந்துள்ளன.
தொல்காப்பிய ஆய்வடங்கல்
    துரை.பட்டாபிராமன் என்பவர் 1999 இல் இலக்கண ஆய்வடங்கல் ஒன்றைத் தயாரித்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மூலம் வெளியிட்டுள்ளார். இது செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பொழில், ஆராய்ச்சி, மொழியியல் உள்ளிட்ட இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 1528 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இதன் ஆய்வெல்லை 1985 வரை மட்டுமே. இதனைத் தொடர்ந்து மு.சங்கர் என்பவர் 2019 இல் தொல்காப்பிய ஆய்வடங்கல் ஒன்றைக் காவ்யா பதிப்பகம் வழி வெளியிட்டுள்ளார். இதன் எல்லை 2000 - 2019 வரை. இதில் 333 கட்டுரைகளும் 58 ஆய்வேடுகளும் அடைவுபடுத்தப்பட்டுள்ளன.
தொல்காப்பிய உரைகள் பற்றிய ஆய்வுகள்
    தொல்காப்பியத்தின் மூன்று அதிகாரங்களுக்கும் இளம்பூரணர், நச்சினார்க்கினியர் உரைகள் கிடைக்கின்றன. சொல்லதிகாரத்திற்கு மட்டும் சேனாவரையர், தெய்வச்சிலையார், கல்லாடர் உரைகளும் மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல், மரபியல் ஆகிய இறுதி நான்கு இயல்களுக்குப் பேராசிரியர் உரையும் கிடைக்கின்றன. தொல்காப்பிய உரைகள் பற்றிய ஆய்வுகள் ஒட்டுமொத்தமாகவும் தனித்தனியாகவும் நிகழ்த்தப்பட்டுள்ளன. சந்தானம் என்பவர் பேராசிரியரின் உரைத்திறன் பற்றி ஆராய்ந்துள்ளார். க.மகேஸ்வரி தொல்காப்பிய உரையாசிரியர்களின் வடமொழிப்புலமை (2003) என்ற தலைப்பிலும் எஸ்.ஜெயசுதா என்பவர் தொல்காப்பியச் சொல்லதிகார உரைகள் ஓர் ஒப்பாய்வு (2005) என்ற தலைப்பிலும் ச.புவனேஸ்வரி என்பவர் தொல்காப்பியம் இளம்பூரணர் உரைகளில் சொல் அகராதி (எழுத்து, சொல், பொருள்) என்ற தலைப்பிலும் (2006) தொல்காப்பிய உரைகள் வழி அறியலாகும் தமிழ்ச் சமூகம் (2008) என்ற தலைப்பிலும் ஆராய்ந்துள்ளனர். ச.குருசாமி என்பவர் இளம்பூரணர் உரைநெறியையும் (2007) நச்சினார்க்கினியர் உரைநெறியையும் (2008) வெளியிட்டுள்ளார்.  மேலும், அ.ஆறுமுகம் என்பவர் தொல்காப்பியச் சொல்லதிகாரக் கல்லாடர் உரையும் பெயர் அறியப்படாத உரையும் (2014) என்ற தலைப்பிலும் வே.விக்னேசு என்பவர் தொல்காப்பியச் சொல்லதிகாரப் பழையவுரைகள் - ஒப்பீடு என்ற தலைப்பிலும் தொல்காப்பியப் பொருளதிகார உரைகள் ஒப்பீடு (2017) என்ற தலைப்பிலும் கோ.சுந்தராம்பாள் என்பவர் தொல்காப்பியச் சொல்லதிகார உரைகள் - ஓர் ஒப்பியல் ஆய்வு (2017) என்ற தலைப்பிலும் ஆராய்ந்துள்ளனர்.
தொல்காப்பியமும் கருத்தரங்குகளும்
    தமிழ்மொழி செம்மொழியாக (2004) அறிவிக்கப்பட்ட பின்னர் தொல்காப்பியம் குறித்த ஆய்வுகளும் கருத்தரங்குகளும் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் நிகழ்த்தப்பட்டன. சென்னையில் இயங்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தொல்காப்பியர் ஆய்விருக்கை தொடங்கப்பட்டு பல்வேறு கருத்தரங்குகளை நடத்தியுள்ளன. மேலும், புதுச்சேரி, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கப்பட்டு, தொல்காப்பியத்தை உலகறியச் செய்தது. பிரித்தானியாவில் தொல்காப்பியர் தமிழ் ஆய்வுக்கழகம் ஒன்று செயல்பட்டு வருவது இவண் குறிப்பிடத்தக்கது.
தொல்காப்பியமும் ஆய்வுகளும்
    வ.சுப.மாணிக்கனாரின் தொல்காப்பியக் கடல் (1987) என்ற நூலும் ச.அகத்தியலிங்கத்தின் தொல்காப்பிய உருவாக்கம், தொல்காப்பியக் கவிதையியல் (2016) ஆகிய நூல்களும் தொல்காப்பியரின் பாவியல் கோட்பாடு (1998) என்ற நூலும் இரா.காசிராசனின் காப்பியரின் எழுத்திலக்கணக் கோட்பாடும் சொல்லிலக்கணக் கோட்பாடும் குறிப்பிடத்தக்கவை. இரா.செகதீசனின் தொல்காப்பியப் பொருளதிகாரம் வழி அகநானூறு - ஓர் ஆய்வு என்ற நூலும் தமிழண்ணலின் தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள், தொல்காப்பிய இலக்கிய இயல் ஆகிய நூல்களும் செ.வை.சண்முகத்தின் தொல்காப்பியத் தொடரியல் என்ற நூலும்  சிலம்பு நா.செல்வராசின் தொல்காப்பியப் பாயிரம்: சமூகவியல் ஆய்வு என்ற நூலும் தொல்காப்பியத்தில் மணமுறைகள் - சமூக மானிடவியல் ஆய்வு (2010) என்ற நூலும் சுட்டிக்காட்டத்தக்கவை.
    செ.வை.சண்முகத்தின் தொல்காப்பியரின் எழுத்திலக்கணக் கோட்பாடு, சொல்லிலக்கணக் கோட்பாடு, பொருளிலக்கணக் கோட்பாடு, தொல்காப்பிய ஆய்வு ஆகிய நூல்களும் பொ.நா.கமலாவின் தொல்காப்பியர் முதல் தெரிதா வரை என்ற நூலும் கா.சிவத்தம்பியின் தொல்காப்பியமும் கவிதையும் என்ற நூலும் ஞா.ஸ்டீபனின் தொல்காப்பியமும் இனவரைவியல் கவிதையியலும் என்ற நூலும் துரை.சீனிச்சாமியின் தொல்காப்பியமும் இலக்கியவியலும் என்ற நூலும் இராச.கலைவாணியின் தொல்காப்பியத்தில் இசை: தொன்மையும் தொடர்ச்சியும் என்ற நூலும் தி.அமுதனின் தொல்காப்பிய உத்திகள் என்ற நூலும் ச.வே.சு.வின் தொல்காப்பியரின் இலக்கியவியல் என்ற நூலும் த.முத்தமிழின் தொல்காப்பியக் களவியலும் சங்க இலக்கியமும் என்ற நூலும் ச.சுபாஷ;சந்திரபோசின் தொல்காப்பிய எழுத்தியல் சிந்தனைகள், தொல்காப்பியச் சொல்லியல் சிந்தனைகள் ஆகிய நூல்களும் சோ.இராசலட்சுமியின் தொல்காப்பியம் - சங்க இலக்கியம் உரைமேற்கோள் உரைகள் என்ற நூலும் நினைக்கத்தக்கவை.


No comments:

Post a Comment