Thursday, 9 July 2020

தொல்காப்பியத்தில் நடையியல் கூறுகள்

தொல்காப்பியத்தில் நடையியல் கூறுகள்
    மேனாட்டில் இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய நடையியல் பற்றிப் பல நூற்கள் எழுந்துள்ளன. ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தொல்காப்பியத்தில் நடையியற் கூறுகள் சில தென்படுவதைக் காணலாம். தொல்காப்பியம் கூறும் எச்சவியல், செய்யுளியல் ஆகியவற்றில் நடையியற் கூறுகள் புலப்படுகின்றன. நடையியலார் ஒலியமைப்பு, சொல்லமைப்பு, தொடரமைப்பு, சொற்பயன்பாடு, மொழிக்கட்டமைப்பு, யாப்பமைதி ஆகியவற்றைக் கூறுவர்.
    ஒலியமைப்புப் பற்றித் தொல்காப்பிய எழுத்ததிகாரம் பேசுகின்றது. சொல்லமைப்புப் பற்றி எச்சவியலும் தொடரமைப்புப் பற்றிக் கிளவியாக்கமும் பேசுகின்றன. ஓசைநயம் பற்றிச் செய்யுளியல் பேசுகின்றது. இவ்வியலில் உள்ள வண்ணம், வனப்பு பற்றிக் கூறும் சூத்திரங்கள் நடையியலோடு தொடர்புடையவையாக இருக்கின்றன. மாத்திரை, எழுத்து, அசை, சீர், அடி, யாப்பு, மரபு, தூக்கு, தொடை, பா, அளவியல் முதலிய பன்னிரண்டு உறுப்புக்களையும் யாப்பமைதியினுள் அடக்கலாம்.